ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே பெருங்குளத்தில் கார் மோதி கர்ப்பிணி பலியானார். அவரது மாமியார் காயம் அடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் மகேஷ்வரன் 25. சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்கிறார். இவருக்கும் கடலுாரை சேர்ந்த சத்யபிரியா 21க்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.சத்யபிரியா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்கு மாமியார் வள்ளியுடன் ராமநாதபுரம் சென்றுவிட்டு பஸ்சில் திரும்பினர்.
இரவு 7:00 மணிக்கு பெருங்குளம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீட்டிற்கு செல்ல ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்தனர். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து அதிவேகமாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட கார் இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இதில் காயம் அடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டனர். வழியில் சத்யபிரியா இறந்தார். வயிற்றில் இருந்த ஆண் குழந்தையும் இறந்தது.
வள்ளி மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சத்தியபிரியா உடல் வைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். மோதிய கார் தற்போது பணி மாறுதலில் சென்ற மாவட்ட அதிகாரியின் உறவினர் கார் என போலீசார் தெரிவித்தனர்.அதே நேரம் காரை வேறு வாடகை டிரைவர் வைத்து ஓட்டியதாகவும் தெரிவித்தனர். உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தும் நிலை இருந்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE