அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளான குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுமே துணை அதிபர் வேட்பாளர்களாக கறுப்பினப்பெண்களை நிறுத்தியது இல்லை. அப்படி யாரும் அதிபராக இருந்ததும் இல்லை. ஆனால் இன்று அதனை நடத்தி…காலம் புதிய வரலாறொன்றை பூக்க வைத்திருக்கிறது. துணை அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் கறுப்பினப்பெண் என்கிற பெருமையை கமலாஹாரிஸ் பெறுகிறார். அவர் ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதிலும் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கிறது. இது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கு கிடைத்திட்ட கூடுதல் பெருமிதம்.
கறுப்பின கலாசாரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடனும் போட்டியிட்டனர். ஜனநாயகக் கட்சியினுடைய துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலாஹாரிஸிற்கு 55 வயதாகிறது. அவரது தாய் தமிழ்நாட்டைச்
சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்ற பின் அவரின் தாய் ஷியாமலா கோபாலனால் வளர்க்கப்பட்டவர் கமலாஹாரிஸ்.கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்தான ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.
தாயாரோடு இந்தியாவுக்குச் செல்லும் போதெல்லாம் கமலாவும் தனது இந்தியப் பயணத்தோடு, அதன் பாரம்பரியத்தோடு இணைந்து வளர்ந்தார். இருப்பினும் தாய் ஒக்லாந்தின் கறுப்பினக் கலாசாரத்துக்கு தன்னை மாற்றிக் கொண்டார். தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்தார் கமலா. கறுப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று ஒரு புரிதலுடனும், ஒரு தன்னம்பிக்கையுடனும் வளர்த்தார் என்று தனது சுயசரிதையான 'தி ட்ருத்ஸ் வி ஹோல்ட்' என்கிற புத்தகத்தில் கமலாவே குறிப்பிடுகிறார். ஏனென்றால், நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும், எனது சகோதரியையும் கறுப்பினப் பெண்களாகவே பார்க்கும். ஆகவே எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடக்கூடிய ஒரு மனநிலையிலேயே நாங்கள் வளர்க்கப்பட்டோம். அதற்கு எனது தாயின் உறுதிப்பாட்டின் உறுதியே காரணம் என்று கமலா சிலாகிக்கிறார்.
இந்திய பாரம்பரியம்
கடந்த ஆண்டு டிசம்பரில் ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த அதிபர் வேட்பாளர் போட்டியில் தோல்வியடைந்தார். அந்த நிலையிலும், தன்னை ஒரு புத்துருவாக்கத்திற்கும், மீட்டுருவாக்கத்திற்கும் உள்ளாக்கி தளராத நம்பிக்கையோடு, அயராத முயற்சியோடு தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர், இன்று துணை அதிபராக பயணத்தைத் தொடர போகிறார்.கமலாஹாரிஸ் 'என் அம்மா வுக்குப் 19 வயதாக இருக்கும் போது கலிபோர்னியா வந்து இறங்கினோம். அப்போது அவரிடம் எதுவும் இல்லை. ஆனால், அவரது பூர்வீகத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் அவரிடம் இருந்தது. என் அம்மாவின் பெற்றோர், அதாவது எனது பாட்டி ராஜன் மற்றும் தாத்தா பீ.வி. கோபாலன் இருவரும் என் அம்மாவுக்கு நிறையக் கற்றுக் கொடுத்திருந்தனர். இந்த உலகில் எங்கே அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்க வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்' என்று பெருமை பொங்க கூறுகிறார்.
கமலாவின் நினைவுகள்
'நாங்கள் வளரும் போது அம்மா என்னையும் என் தங்கை மாயாவையும் சென்னைக்கு அழைத்துச் சென்றார். ஏனெனில், அவர் எங்கிருந்து வந்தார் என்பதோடு, எங்கள் மூதாதையர்கள் குறித்து நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் எங்கள் அம்மா விரும்பினார். அந்தத் தருணத்தில் எங்களுக்கு இட்லியை சாப்பிடுவதற்குப் பழக்கப்படுத்த முயன்றார். ஏனென்றால் அது தமிழர்களின் தொன்று தொட்ட உணவு.
சென்னையிலும் தாத்தாவுடன் நான் நீண்ட நடைப்பயிற்சியை எடுத்துக் கொள்வேன். அப்போது அவர் ஓய்வு பெற்றிருந்தார். காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது நான் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்து சென்ற நிகழ்வு கனவுகளோடும், ஒருவித மிரட்சியோடும் இன்று அசைபோட்டுப் பார்க்கிறேன். ஒரு மீள்பார்வையாக அப்போது அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எப்படி உருவானது என்பது குறித்தும், அதற்காகப் போராடியவர்கள் குறித்தும் என்னிடம் நிறையக் கூறி இருக்கிறார்.
இன்று நான் அவர் விட்டுச் சென்ற இடத்தில் தொடங்கி என் கடமையை எடுத்துச் செல்கிறேன். என் கடந்த காலத்தை நான் எப்போதும் மறந்ததில்லை. ஏனென்றால், நிகழ்காலத்தில் ஒரு நிதர்சனத்திற்காக எனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறதல்லவா? நான் இங்கு இந்த இடத்தில் நிற்பதற்கு காரணம் அவர் கூறிய கதைகள், அதற்குள் வேரூன்றி இருக்கின்ற இந்தியப் பாரம்பரியமும்தான்'என்கிறார் கமலா.
அரசியல் சர்ச்சை
அமெரிக்காவில் பிறந்தவர்கள் மட்டுமே துணை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இதனால் கமலாஹாரிஸ் தேர்தலில் போட்டியிட முடியாது என அமெரிக்க அரசியல்வாதிகள் வேண்டுமென்றே சர்ச்சையைக் கிளப்பினார்கள். கமலாவின் தந்தை டொனால்டு ஹாரிஸ் கரீபியன் தீவு நாடான ஜமைக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர். அவரது தாய் ஷியமளா கோபாலன் தமிழகத்தில் இருந்து அமெரிக்கா சென்றவர். கமலா 1964ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆக்லேந்தில் பிறந்தவர். ஆகவே அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது.
கமலாஹாரிஸ் ஹாவார்ட் பல்கலையில் பயின்றவர். பல்கலை வாழ்க்கை தன்னை செதுக்கியதாக சிலாகித்துச் சொல்கிறார். தனது அடையாளம் குறித்து, தனது நிறம் குறித்து எந்த அசவுகரியமும் ஏற்பட்டது இல்லை. ஏனென்றால் எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், நான் ஓர் அமெரிக்கன் என்று குறிப்பிடுகிறார். நிறத்தாலோ அல்லது பின்புலத்தாலோ ஒருவர் அரசியல்வாதியாகக் கூடாது என்கிற சித்தாந்தத்தில் ஊறித் திளைத்தவராக இருக்கிறார்.
நான் யாரென்று உங்களுக்கு ஐயம் ஏற்படுமெனில் எனது செயல்பாடுகளின் மூலமே நீங்கள் என்னைத் தீர்மானிக்க வேண்டும் என்கிற அவரது கருத்தை நாம் வெகுவாகப் பாராட்டலாம்.அடுத்த அதிபராக
இதில் அசைக்க முடியாத
நம்பிக்கை ஒன்று ஊடாடுகிறது. துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதால், 2024 அதிபர் போட்டியில் மீண்டும் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் அவருக்கு கனிந்து வரும் என்பதுதான் அந்த நம்பிக்கை.ஏனென்றால் அவர் ஜனநாயகக் கட்சியின் எதிர்காலத்திற்கான ஒரு வலுவான சக்தியாக நம்பப்படுகிறார். கமலா தனது ஆழ்ந்த வேர்களை சமூக சேவைகளின் மூலமாகவும், சிறந்த கல்வியின் மூலமாகவும் கிளை பரப்பி இருக்கிறார். கலிபோர்னியா பல்கலையில் சட்டம் பயின்றவர். அலமேடா கவுண்டியின் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் தனது பணியைத் தொடங்கினார். 2003ல் சான்பிரான்சிஸ்கோ மாவட்டத்தில் அட்டர்னி ஜெனரல் ஆனார். அதன்பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ஆனார். இத்தருணம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கலிபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பைப் பெற்றுத்திகழ்ந்தார். அக்காலகட்டத்தில் இரு முறை அட்டர்னி ஜெனரல் ஆக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்டார்.அச்சமயத்தில்தான் அவரது திறமை தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்தது.வரலாற்றுப்பயணம்
ஜனநாயகக் கட்சியின் ஆப்பிரிக்க அமெரிக்க தலைவரான ஜேம்ஸ் ஸ்டீபன் கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத் தினார். ஏனென்றால், ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ்பிளாய்ட் போலீசாரின் பிடியில் உயிரிழந்தார். 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ்' என்ற போராட்டம் தொடர்ந்து வெடித்தது. வெறும் அரசியல் வாக்குறுதிகளாக இல்லாமல், செயலில் மாற்றங்கள் வேண்டும் என அப்போது போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இத்தகைய துருப்புச்சீட்டு அரசியலில் கமலாஹாரிசுக்கு ஒரு புதிய நகர்வை தந்திருக்கிறது.
ஜோபிடன் கூறும் போது, 'கமலாவுடன் தேர்தல் பிரசாரத்தில் நிற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்' என்றார். வெள்ளைமாளிகையை நோக்கி, ஒரு தமிழராக தொடர இருக்கின்ற கமலாஹாரிஸின் வெற்றி தமிழ் பாரம்பரியத்தின் மீதான ஒரு வரலாற்றுப் பயணமாகவே இருக்கும்.-முனைவர் வைகைச்செல்வன்தமிழக முன்னாள் அமைச்சர் mlamailid@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE