திருப்பூர்:திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், பலத்த மழை பெய்தாலும், குடிநீர் மற்றும் பாசன வசதிக்கான தண்ணீர் தேவை, என்றுமே முழுமையாக பூர்த்தியானதில்லை.
கடந்த சில நாட்களாக, திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், தாழ்வான பகுதிகள், குளம், குட்டை உட்பட நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் தேங்கி உள்ளது. 60 ஏக்கர் பரப்பில் ஆண்டிபாளையம் குளம் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி, உபரி நீரும் வெளியேறி வருகிறது.சாமளாபுரம் குளம், 70 சதவீதம், பள்ளபாளையம், 10 சதவீதம், மண்ணரை குளம், 65 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
பொதுப்பணித்துறையினர் கூறியதாவது:நொய்யல் ஆற்றில், ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. மாறாக, ஆண்டுக்கு, 10 மாதங்கள் வரை, கோவை அடுத்த ஆலந்துறை வரை மட்டுமே தண்ணீர் வரத்து காணப்படும். மாறாக, மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கோவை சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தால் மட்டுமே நொய்யலில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.
நொய்யல் ஆறு கடக்கும் நான்கு மாவட்டங்களில், ஆற்றின் குறுக்கே, 23 அணைக்கட்டுகள் வாயிலாக, 31 குளங்கள் உள்ளன. தற்போது, பரவலாக மழை பெய்து வந்தாலும், திருப்பூர் மாவட்ட குளங்களுக்கான தண்ணீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது. கனமழை பெய்து, நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே பெருமளவு குளங்கள் நிரம்பும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE