புதுடில்லி : மத்திய அரசு, உற்பத்தியுடன் ஒருங்கிணைந்த ஊக்க திட்டத்தை, மேலும், 10 துறைகளுக்கும் அறிவித்திருப்பது, தொழில்துறை மீதான அதன் அணுகுமுறையில், வியத்தகு மாற்றத்தை காட்டுகிறது என, மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.
கடந்த, 11ம் தேதியன்று, மத்திய அமைச்சரவை, 'பி.எல்.ஐ.,' எனும், உற்பத்தியுடன் ஒருங்கிணைந்த ஊக்க திட்டத்தை, கூடுதலாக மேலும், 10 துறைகளுக்கு அறிவிப்பதற்கு அனுமதி வழங்கியது. இத்திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளில், 1.46 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். மற்றொரு பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், ஏற்கனவே, 51 ஆயிரத்து, 311 கோடி ரூபாய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: நான், 'கேம் சேஞ்சர்' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதில்லை. ஆனால், இந்த திட்டத்திற்கு அது பொருத்தமானது. என்னைப் பொறுத்தவரை, இந்த திட்டத்தின் செயல்முறைகளை விட, முக்கியமானதாக நான் கருதுவது, தொழில்துறை மீதான அணுகுமுறையில் உள்ள வியத்தகு மாற்றத்தை தான்.
இத்திட்டத்தின் கொள்கைகள், தொடர்ச்சியாகவும், வெளிப்படையாகவும் பயன்படுத்தப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட துறையை சேர்ந்த தொழில்கள், சவால்களை சந்திக்கும் அளவுக்கு உயரும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE