சென்னை : சென்னைக்கு, 21ம் தேதி வரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில், 67 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டுகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ௨௧ம் தேதி சென்னை வருகிறார். கலைவாணர் அரங்கில், அன்று மாலை, 4:30 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடக்கும், அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில், 400 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள, திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகை புதிய நீர்தேக்க திட்டத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு, அமித்ஷா அர்ப்பணிக்கிறார்.

மேலும், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் மதிப்பிலான, சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகள்; கோவை அவிநாசி சாலையில், 1,620 கோடி ரூபாயில் அமைக்க உள்ள, உயர்மட்ட சாலை திட்டம். கரூர் மாவட்டம், நஞ்சை புகலுாரில், 406 கோடி ரூபாயில், காவிரி ஆற்றின் குறுக்கே அமைய உள்ள கதவணை திட்டம்; சென்னை வர்த்தக மையத்தை, 309 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யும் திட்டம்.
மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், வல்லுாரில், 900 கோடி ரூபாயில் அமைய உள்ள பெட்ரோலிய முனையம், மணலி ஆமுல்லைவாயலில், 1,400 கோடி ரூபாய் மதிப்பில், 'லுாப் பிளான்ட்' அமைத்தல். காமராஜர் துறைமுகத்தில், 900 கோடி ரூபாயில், புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு, அமித்ஷா அடிக்கல் நாட்டி, சிறப்புரையாற்ற உள்ளார். விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE