மத்திய பிரதேச சட்டசபை இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மாநில காங்., தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இரு பதவிகளில், ஏதாவது ஒன்றிலிருந்து கமல்நாத் விலகுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதிர்ச்சி:
மத்திய பிரதேசத்தில், 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில தொகுதிகளில்கூட, காங்கிரஸ் வெற்றி பெறாமல், தோல்வியை தழுவியது, அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் மேலிடத்தின் பார்வை, முன்னாள் முதல்வர் கமல்நாத் மீது திரும்பியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை வென்று காட்டுவதாக, ராகுலிடம், கமல்நாத் கூறியிருந்தார். அப்போது முதலே, தன்னை நம்ப வைத்து ஏமாற்றியவர் கமல்நாத் என்ற கடும் அதிருப்தி, ராகுலுக்கு இருந்து வருவது, கட்சியில் உள்ள பலருக்கும் தெரியும். அடுத்ததாக, ஜோதிராதித்ய சிந்தியா, கட்சியிலிருந்து விலகுவதற்கும், கமல்நாத் முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது, இடைத்தேர்தல் தோல்விகளும் சேர்ந்துள்ளன. இந்நிலையில் தான், கமல்நாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என, இரு பதவிகளில், தற்போது கமல்நாத் இருந்து வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர்:
இதில் ஏதாவது ஒன்றிலிருந்து கமல்நாத் விலக வேண்டுமென்ற குரல்கள், வலுப்பெற்றுள்ளன. அமைப்பு ரீதியாக கட்சியைப் பலப்படுத்த வேண்டுமெனில், இரு பதவிகளில் இருப்பது சரியாக வராது என்பதை, கமல்நாத்தும் உணர்ந்துள்ளார். இதனால், ஏதாவது ஒரு பதவியை விட்டுத்தர, மனதளவில் அவர் தயாராகிவிட்டார் என்றே கூறப்படுகிறது. அதன்படி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி, மாநிலத் தலைவராக தொடர, கமல்நாத் முடிவு செய்துள்ளதாக, காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE