போடி : தினமலர் செய்தி எதிரொலியாக போடி மீனாட்சியம்மன் கண்மாய்க்கு பொதுப்பணித்துறையினரால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
குரங்கணி கொட்டகுடியில் தொடர்மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து போடி அருகே பங்காருசாமி கண்மாய், சங்கரப்பன் கண்மாய்களில் நீர் நிரம்பியது. ஜமீன்காலத்து முறை என கூறி போடி மீனாட்சியம்மன் கண்மாய்க்கு நீர் திறந்து விட மறுக்கப்பட்டது. இக்கண்மாய் நிரம்பாவிட்டால் 7 கிராமங்களுக்கு வறட்சி ஏற்படுவதோடு 600 ஏக்கர் நிலங்கள் தரிசாகவும், ஆயிரம் கிணறுகள் நிலத்தடி நீர் இன்றி பாதிக்கும் நிலை உருவாகும்.இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி மீனாட்சியம்மன் கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் மனு கொடுத்தனர்.
அது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கலெக்டர் உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் போடி சாலைக்காளியம்மன் கோயில் கொட்டகுடி ஆற்றின் மதகு பகுதியிலிருந்து மீனாட்சியம்மன் கண்மாய்க்கு நேற்று நீரை திறந்து விட்டனர். கண்மாய்க்கு நீர்வர துவங்கியதையொட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE