மதுரை : மதுரையில் பருவமழை துவங்கியுள்ளதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் வெளியேற வரத்து கால்வாய் அடைப்புகளை சரி செய்ய பொதுப்பணித் துறையினருக்கு கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார்.
வடகிழக்கு பருவமழை சில நாட்களாக பெய்கிறது. கண்மாய்களில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. தண்ணீர் ஊருக்குள் புகுவதை தவிர்க்க கீழப்பனங்காடி பேச்சிகுளம் ஊராட்சி ஆனந்தநகர், ஆனையூர் கண்மாயிலிருந்து உபரிநீர் வெளியேறும் கூடல்புதுார் கால்வாய், செல்லுார் கண்மாய், கண்மாயிலிருந்து உபரிநீர் வெளியேறும் பந்தல்குடி கால்வாய், வைகையில் சேரும் ஆழ்வார்புரம் பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின் கலெக்டர் கூறியதாவது: கண்மாய்களிலிருந்து உபரிநீர் கால்வாய்கள் வழியாக தங்குதடையின்றி வெளியேற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 33.11 மி.மீ., மழை பெய்துள்ளது. பேரிடர் மேலாண்மை துறை மூலம் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்ட 27 இடங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த இடங்களிலுள்ளவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேற கால்வாய் அடைப்புகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.
பொதுப்பணித்துறை பெரியாறு வைகை நீர்வள ஆதார செயற் பொறியாளர் சுகுமாரன், உதவி கோட்ட பொறியாளர்கள் மொக்கமாயன், செல்வம், ஆர்.டி.ஓ., முருகானந்தம், தாசில்தார் முத்துவிஜயன், உதவி பொறியாளர்கள் மோகன்குமார், மாயகிருஷ்ணன் உடன் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE