போபால்: கட்டாயமாக மதம் மாற்றி, திருமணம் செய்வோருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த, மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
அதிர்வலை
ஒரு பெண்ணை காதலித்து, அவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, மணம் புரிவதை, 'லவ் ஜிகாத்' என்கின்றனர். மதம் மாறாத பெண்களை கொலை செய்வது, 'ஆசிட்' வீசுவது போன்ற கொடூர சம்பவங்கள் நடக்கின்றன. ஹரியானாவில், 21 வயது மாணவி, மதம் மாற சம்மதிக்காததால், அவரை காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம், நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது போன்ற கொடுமையை தடுக்க, மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் தலைமையிலான, பா.ஜ., அரசு, புதிய சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது.
இது குறித்து, அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரைவில் லவ் ஜிகாத் சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின், கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது. அனுமதிஅவ்வாறு திருமணம் செய்தவரை, ஜாமினில் வர முடியாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க, இந்த சட்டம் வகை செய்யும்.

இத்தகைய மோசடி திருமணத்திற்கு உதவியாக இருந்தவரும் கைது செய்யப்படுவார். புதிய சட்டத்தின்படி, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதாக இருந்தால், அது குறித்து ஒரு மாதத்திற்கு முன், கலெக்டரிடம் தெரிவித்து, அனுமதி பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். பா.ஜ., ஆளும், ஹரியானா, உ.பி., போன்ற மாநிலங்களும், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டமியற்ற திட்டமிட்டு உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE