சென்னை : காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பல ஏரிகள் நிரம்பி வருவதால், பொதுப்பணித்துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து, செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை பராமரிப்பில், 908 ஏரிகள் இருந்தன. மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதால், தற்போது காஞ்சிபுரத்தில், 381 ஏரிகள் மட்டுமே உள்ளன. இதில், 92 ஏரிகள் வாயிலாக பாசனம் நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், 527 ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள ஏரிகளுக்கு, தொடர்ந்து நீர்வரத்து கிடைத்து வருகிறது.
இதனால், ஏரிகள் நிரம்பி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, காஞ்சிபுரத்தில், 38 ஏரிகள் முழுக்கொள்ளளவு நிரம்பியுள்ளது. அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. மொத்தத்தில், 90 சதவீதம் ஏரிகள், 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. மேலும், 183 ஏரிகள் பாதி கொள்ளளவிற்கு மேல் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், 29 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளன. மேலும், 37 ஏரிகள், 75 சதவீதத்திற்கு அதிகமாகவும், 37 ஏரிகள் பாதி கொள்ளளவிற்கு மேலும் நிரம்பியுள்ளன. வடகிழக்கு பருவமழை முடிவதற்கு கால அவகாசம் இருப்பதால், அதற்குள் அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால், பொதுப்பணித்துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE