சென்னை : 'உண்மை சம்பவங்களை உடனுக்குடன்கொண்டு செல்லும் ஊடகங்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என, இந்தியன்ஸ் விக்டரி கட்சி, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, அந்த கட்சி வெளியிட்ட அறிக்கை:இயற்கை சீற்றங்களான புயல், சுனாமி, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் மற்றும் கொள்ளை நோய்களான காலரா, கொரோனா உட்பட அனைத்து சேதாரங்களையும், நேரில் சென்று, உண்மை சம்பவங்களை செய்திகளாக, உடனுக்குடன் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் பொதுச்சேவை நிறுவனங்களாக ஊடகங்கள் உள்ளன.போராட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம், திருவிழா, கலவரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள், விபத்துக்கள் நடக்கும்
இடங்களில், ஊடகங்கள், காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.போராட்டங்கள், கலவரமாக மாறும்போது, காவல் துறையினருடன், ஊடகத் துறையினரும் கலவரக்காரர்களால் தாக்கப்படுகின்றனர். சில நேரங்களில், உயிரிழப்புகள் கூட நடக்கின்றன. உண்மை சம்பவங்களை நேரடியாக படம் பிடிக்கும் போது, கேமராக்களும் சேதப்படுத்தப்படுகின்றன. பொதுசேவை செய்யும் ஊடகங்களுக்கு, திரைப்படங்களுக்கு வழங்குவது போல், ஊக்கத்தொகை வழங்கபட வேண்டும்.
செய்தி சேகரிப்பவர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ, கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டாலோ தகுந்த நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். ஊடகத்துறையினருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இழப்பீட்டு தொகையாக, மத்திய, மாநில அரசுகள், 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE