ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார் பகுதிகளில் மழை அதிகமாக பெய்கிறது.இன்று காலை, 8:00 மணி நிலவரப்படி, குன்னுார், 74 மி.மீ,உலிக்கல் 45 மி.மீ., கோடநாடு 40 மி.மீ., ஊட்டி 22.5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.
அருவங்காடு, சாமண்ணா பூங்கா உள்ளிட்ட இடங்களில் விழுந்த மரம் மற்றும் மரக்கிளைகளை தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றினர்.அதிகாலையில் லெவல் கிராசிங் அருகே ஏற்பட்ட லேசான மண்சரிவை, நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
குன்னுார் - கோத்தகிரி சாலையில், காலை 8:00 மணியளவில் ஒரே இடத்தில், 3 மரங்கள் விழுந்தது. மின்கம்பங்கள் சேதமடைந்தன. எடப்பள்ளி சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. தகவலின் பேரில் குன்னுார் தீயணைப்பு துறையினர் அகற்றி வருகின்றனர். மின் கம்பம் சீரமைப்பில் மின்வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

காட்டேரி டபுள் ரோடு பகுதியில் விழுந்த மரத்தால் கடைகள் சேதமடைந்தன.குன்னுாரில் நிலச்சரிவு அபாயமுள்ள 133 இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏதேனும் பாதிப்பு இருந்தால் 1077 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேக மூட்டம் நிலவுவதால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளதால், மித வேகத்தில் இயக்கப்படுகிறது.கடுங்குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்காடாக மாறியது ஆவடி
ஆவடியில், மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல பகுதிகளில், மழைநீர் தேங்கி உள்ளது. தாழ்வான பகுதி குடியிருப்புகளில், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், பொக்லைன் இயந்திரங்களால், விளிஞ்சியம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாய், பருத்திப்பட்டு ஏரி உபரி நீர் கால்வாய்களில் அடைப்பை நீக்கியும், அகலப்படுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையில், 18வது வார்டுக்கு உட்பட்ட ஆவடி, சங்கரர் நகர், 2வது பிரதான சாலை, 6வது தெரு, 7வது தெரு, 8வது தெரு உள்ளிட்ட தெருக்களில், மழைநீர் புகுந்தது.அதேபோல், 38வது வார்டுக்கு உட்பட்ட பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம், குறிஞ்சி மாநகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதி தெருக்களில், மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
துடியலூர் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னத்தடாகம் வட்டாரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை முதல் பல இடங்களில் தொடர்ந்தும், சில இடங்களில் விட்டு விட்டும், மழை பெய்தது. இதனால், மலையோர கிராமங்களில் சிறு ஓடைகள், குளம், குட்டைகளில் குறிப்பிடத்தக்க அளவு நீர் நிரம்பியது.மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. தடாகம் ரோட்டில் காளையனூர் அருகே சாலையோரம் இருந்த மரம் வேருடன் சாய்ந்து, ரோட்டில் விழுந்தது. அதை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் ஊராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

தொடர் மழையால் மகிழ்ச்சி
அன்னுாரில் இரண்டாவது நாளாக நேற்றும், மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில், பல மாவட்டங்களில், ஒரு வாரமாக மழை பெய்த போதும், அன்னுார் வட்டாரத்தில், மழை பெய்யவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில், அரை மணி நேர கனமழையும், இரண்டரை மணி நேரம் தூறல் மழையும் பெய்தது. நேற்று மாலை 4:30 மணிக்குத் துவங்கி, 5:30 மணிவரை, ஒரு மணி நேரம் மழை பெய்தது. மழையால், விவசாயிகள், பொதுமக்கள், மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் அன்னுார் வட்டாரத்தில் உள்ள குளங்களுக்கு மழை நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மழைநீர் புகுந்து 40 வீடுகள் பாதிப்பு
கடலூரில் குறிஞ்சிப்பாடி அருகே வடிகாலை துார்த்ததால் மழைநீர் புகுந்து, 40 வீடுகள் பாதிக்கப்பட்டன.குறிஞ்சிப்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட, குள்ளஞ்சாவடி அடுத்த, சின்னதானங்குப்பம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதில், ஒரு கூரை வீடு விழுந்தது. மேலும், 40 வீடுகளில் உள்ள பொருட்கள் பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் உள்ள, பாப்பான்குளம், செந்தாமரைகுளம் ஆகிய நீர்நிலைகளுக்கு செல்லும் வடிகால்களை துார்த்ததால், மழைநீர் வடிய வழியின்றி வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியை, குறிஞ்சிப்பாடி தாசில்தார், தமிழ்ச்செல்வி பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினார். வழுதலம்பட்டு ஊராட்சி தலைவர், கலைச்செல்வி தலைமையில், சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டு, இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மழைநீர் வடிவதற்கான பணிகள் நடந்தன.
புதுப்பட்டினத்தை சூழ்ந்தது வெள்ளம்
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம் ஊராட்சியின், பெரியார் நகர், ராஜா நகர் உள்ளிட்ட பகுதிகள்; வாயலுார் ஊராட்சியின், உய்யாலிகுப்பம் பகுதி, பக்கிங்ஹாம் கால்வாய் நீர்பரப்பு பகுதி அருகில் அமைந்து உள்ளன. பருவமழை, கடல் காற்றழுத்தம், புயல் காலங்களில், கனமழை பெய்யும்போது, கால்வாயில், வெள்ளம் பெருக்கெடுத்து, வசிப்பிட பகுதிகளை சூழ்கிறது. பல நாட்கள், நீர் வடியாமல், இப்பகுதியினர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தின கனமழையால், இப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. நீரை வெளியேற்றி, கடலில் விட, கல்பாக்கம் நகரிய முகத்துவாரம் மற்றும் உய்யாலிகுப்பம் பகுதிகளில், கடற்கரை மணல் அடைவு, ஜே.சி.பி., மூலம் அகற்றி, நீரோடை ஏற்படுத்தப்பட்டது. வெள்ளம், கடலுக்கு பாய்கிறது.
பெரியகுளத்தில் 38 மி.மீ., மழை
தேனிமாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சிலநாட்களாக பரவலாக பெய்துவருகிறது. நேற்று காலை 8:30 மணிப்படி மழையளவு: ஆண்டிபட்டி 9.2 மி.மீ., அரண்மனைப்புதுார் 14, போடி 12.2, கூடலுார் 15, மஞ்சளாறு 8, பெரியகுளம் 38, பெரியாறு அணை 16.2, தேக்கடி 30, சோத்துப்பாறை 23, உத்தமபாளையம் 8.1, வைகை அணை 18, வீரபாண்டி 13.2 என மொத்தம் 204.9 மி.மீ., மழை பதிவானது. நேற்று பகலில் வெயில் அதிகமின்றி அவ்வப்போது சாரல் பெய்து குளுமையான சூழல் நிலவியது.
நிலக்கோட்டையில் 21.4 மி.மீ., மழை
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 21.4 மி.மீ., மழை பதிவானது.மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், நேற்றும் காலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திண்டுக்கல் சிலுவத்துார், குள்ளனம்பட்டி, நாகல் நகர், ஒய்.எம்.ஆர்.,பட்டி, பொன்னகரம், தாடிக்கொம்பு, ரெட்டியார்சத்திரம் ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.குளங்கள், ஏரிகள், கண்மாய்களில் நீர் வரத்து உள்ளது. நேற்று காலை வரை திண்டுக்கல்லில் 12.9 மி.மீ., கொடைக்கானல் 17, படகு குழாம் 15.3, பழநி 11, சத்திரப்பட்டி 13.2, நத்தம் 4, வேடசந்துார் 2, காமாட்சிபுரம் 5.8, மழை பெய்தது. மாவட்டத்தில் மொத்தம் 104.6 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 21.4 மி.மீ., மழை பதிவானது. வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கடலூரில் கனமழை
கடலுார் மாவட்டம் கடலோர பகுதியாக இருப்பதால் மாநிலத்தில் அதிக மழை பெறும் பகுதியாக இருந்தது. காலப்போக்கில் பருவ நிலை மாற்றத்தால் பருவமழை குறைந்து வருகிறது.தென்மேற்கு பருவ காற்றின் மூலம் கர்நாடகா மாநிலத்தில் மழைபெய்யும்போது காற்றின் வேகத்தால் தப்பி வரும் மேகக் கூட்டத்தினால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை கிடைக்கிறது. தென்மேற்கு பருவ காற்றின் மூலம் கிடைக்க கூடிய இயல்பான மழையளவான 383.1மி.மீட்டருக்கு நடப்பு ஆண்டு 385.9 மி.மீ., பெய்துள்ளது.இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தாமதமாக துவங்கியது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சாராசரியாக 697.8 மி.மீ., இயல்பான மழை பெய்ய வேண்டும். இதுவரை 278.மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த 13ம் தேதி துவங்கிய பருவ மழை படிப்படியாக தீவிரம் அடைந்தது.கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடலுார் வழியாக ஓடும் கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேப்போல உப்பனாறு போன்ற ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
வானமாதேவி 'டாப்'
கடலுார் மாவட்டத்தில் நேற்று காலை 8:30 வரையில் வானமாதேவியில் அதிகபட்சமாக 76 மீ.மீட்டர் மழை பதிவாகியது. வானமாதேவி 76 மீ.மீட்டர், எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 74, தொழுதுார் 55, கடலுார் 47.6, பெலாந்துரை 46, ஸ்ரீமுஷ்ணம் 45.2. லாக்கூர்44.2, பண்ருட்டி 44, புவனகிரி 43, கலெக்ட்ரேட் 42.1, கீழ்ச்செருவாய் 42, வேப்பூர் 39, அண்ணாமலைநகர் 36.2, காட்டுமயிலுார் 35, சேத்தியாத்தோப்பு 34, கொத்தவாச்சேரி 31, சிதம்பரம் 30, குப்பநத்தம் 28, மே மாத்துார் 28, குறிஞ்சிப்பாடி 27.5, பரங்கிப்பேட்டை 27.2, லால்பேட்டை 27, வடக்குத்து 24, காட்டுமன்னார்கோவில் 23.3 மீ.மீட்டர் பதிவாகியது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 9.36 மீ.மீட்டரும், சராசரியாக 39.10 மீ.மீட்டர் மழை பதிவாகியது.
மருத்துவமனையை சூழ்ந்த நீர்
திருநெல்வேலி அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள்ளும் மழை நீர் உள்ளே புகுந்ததால், நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
நெல்லை மாவட்ட மழை அளவு:
பாபநாசம்:117 மி.மீ
சேர்வலாறு:106 மி.மீ
மணிமுத்தாறு:65 மி.மீ
நம்பியாறு:26 மி.மீ
கொடுமுடியாறு:60 மி.மீ
அம்பாசமுத்திரம்:80.40 மி.மீ
சேரன்மகாதேவி:68 மி.மீ
ராதாபுரம்:34 மி.மீ
நாங்குநேரி:43 மி.மீ
பாளையங்கோட்டை:46 மி.மீ
நெல்லை:42 மி.மீ
தென்காசி மழை அளவு
கடனா: 73 மி.மீ
ராமா நதி:95 மி.மீ
கருப்பா நதி:62 மி.மீ
குண்டாறு:99 மி.மீ
அடவி நயினார்:58 மி.மீ
ஆய்குடி:60.06 மி.மீ
சங்கரன்கோவில்:48 மி.மீ
செங்கோட்டை:71 மி.மீ
சிவகிரி:81 மி.மீ
தென்காசி:72.40 மி.மீ
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE