சேலம்: சீர்மிகு நகர திட்டப்பணிகளை அமல்படுத்துவது குறித்த தரவரிசை பட்டியலில், சேலம் மாநகராட்சி, 70.7 புள்ளிகளில், தேசிய அளவில் எட்டாமிடம், தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
மத்திய அரசின் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில், 2016 மார்ச்சில், சேலம், கோவை, சென்னை உள்பட, 100 நகரங்கள், சீர்மிகு நகர திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில், தமிழகத்தில், 11 மாநகராட்சிகள், இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் நிறைவேற்றுவதை அடிப்படையாக வைத்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், சீர்மிகு நகர திட்டத்தில், ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்தியது, திட்டப்பணிகளை நிறைவேற்றியது உள்ளிட்டவை அடிப்படையில், மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. கடந்த, 13ல் வெளியான தரவரிசைப்பட்டியலில், சேலம் மாநகராட்சி, 70.7 புள்ளிகளுடன் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்திய அளவில், எட்டாமிடத்தையும் பிடித்தது. அகில இந்திய அளவில் முதலிடத்தை அகமதாபாத், இரண்டாம் இடத்தை சூரத், மூன்றாமிடத்தை இந்தூர் நகரங்கள் பிடித்துள்ளன.
சேலம் மாநகராட்சியில், 2016ம் ஆண்டிலேயே திட்டப்பணியை தொடங்கினாலும், வரைவு அறிக்கை தயாரித்தல், அதற்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட முதல்கட்ட பணிக்கே, இரு ஆண்டுக்கு மேலானது. பின், மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று, 965.87 கோடி ரூபாய் மதிப்பில், 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, சீர்மிகு நகர பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. கொரோனா சூழலால், நான்கு மாதம் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக முழு வேகத்தில் நடந்து வருகின்றன. தொங்கும் பூங்காவில், 10.50 கோடி ரூபாயிலும், கோட்டையில், 5.85 கோடி ரூபாயிலிலும், குளிரூட்டப்பட்ட பல்நோக்கு சமூக கூடங்கள், 18.8 கோடி ரூபாயில் திருமணி முத்தாறு கரைகள் அபிவிருத்தி பணி, 7.85 கோடி ரூபாயில் விக்டோரியா பல்லடுக்கு வாகன நிறுத்தம், 5.90 கோடி ரூபாயில், புது பஸ் ஸ்டாண்ட் புனரமைப்பு பணி, 37.16 கோடி ரூபாயில், 11 இடங்களில் 'ஸ்மார்ட்' சாலை, 25.70 கோடி ரூபாயில், 30 நுண்ணுயிர் உரத்தயாரிப்பு மையங்கள், 3.20 கோடி ரூபாயில், இரு இடங்களில் திடக்கழிவு எரியூட்டு ஆலைகள் உள்ளிட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதனால், கடந்த ஆண்டுகளில், தரவரிசைப்பட்டியலில், 50 நகரங்களுக்கும் பின்னடைவில் இருந்த சேலம் மாநகராட்சி, புது பாய்ச்சலில் எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில், ஈரோடு, 18ம் இடம், திருப்பூர், 24ம் இடம், திருச்சி, 60 இடத்தை பிடித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE