பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, ஏடிஎம் மெஷினை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட, நான்கு முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மூக்காரெட்டிப்பட்டி பஸ் நிறுத்தத்தில், கனரா வங்கியும், அருகே அதன் ஏடிஎம் மையமும் உள்ளது. நேற்று அதிகாலை, 12:40 மணிக்கு ஏடிஎம் மையத்துக்கு, முகமூடி அணிந்த நான்கு பேர் வந்துள்ளனர். இருவர் உள்ளே சென்று ஷட்டரை இறக்கி விட்டுள்ளனர். வெளியே ஒருவர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். மற்றொருவர் வேறு பகுதிக்கு சென்றுள்ளார். உள்ளே சென்ற இருவரும், டிரில்லிங் மெஷின் மூலம், ஏடிஎம் மெஷினை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு, வங்கியின் மேல்பகுதி வீட்டில் வசிக்கும் தென்றல் என்பவர், அருகிலுள்ள வி.ஏ.ஓ., கதிரவனிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதன்படி, கதிரவன், அவரது மகன் ரவிராகுல், 28, ஆகியோர் சென்றனர். அங்கு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றபோது, முகமூடி கொள்ளையர்கள் கத்தியால் ரவிராகுல் கையில் குத்தியதுடன், டிரில்லிங் மெஷினை கீழே போட்டு விட்டு தப்பியோடினர். இச்சம்பவத்தில், பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. தகவலின்படி, சம்பவ இடம் வந்த அரூர் டி.எஸ்.பி., தமிழ்மணி விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் ஜூலி சிறிது தூரம் ஓடி விட்டு நின்றது. இது குறித்து அ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய, நான்கு முகமூடி கொள்ளையர்கள் குறித்து, தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE