தமிழகத்திற்கு, அமித் ஷா வரவுள்ளாராம். அதனால் பலரும் பயப்படுகின்றனராம். அவர் என்ன தீவிரவாதியா; கையில், ஏ.கே., 47 துப்பாக்கியுடன் வர உள்ளாரா? தமிழ் மண்ணில் அவரை கண்டு நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?- தமிழக காங்., தலைவர் அழகிரி
'அஞ்சாநெஞ்சன் அழகிரி என, இனிமேல் உங்கள் கட்சியினர் உங்களை அழைக்க ஏதுவாக, இப்படி, ஏ.கே., 47 என்றெல்லாம் பேசுகிறீர்களோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி.
குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பதவியில் நீடித்தால், ஆவணங்கள் கூட மாயமாகி விடக் கூடும்; ஆகையால், பதவி விலகலோ அல்லது தற்காலிக விலகலோ ஏற்பட வேண்டும்.- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி

'இந்த விவகாரம், அ.தி.மு.க.,வுக்கும், துணைவேந்தருக்கும் இடையே நடக்குற பிரச்னை... இதுல எலிகளெல்லாம் குரல் கொடுக்கத் தொடங்குறதைப் பார்த்தா, எல்லாத்துக்குமா சேர்ந்து ஏதோ ஆதாயம் இருக்கிறதா சந்தேகம் வருதே... என்ன விஷயம்?' என, கேட்கத் துாண்டும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் மக்கள் விரோத செயல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அந்த அரசை வீட்டுக்கு அனுப்பி, பா.ஜ., அரசை ஏற்படுத்துவது தான் என் தலையாய பணி.- கேரள மாநில, பா.ஜ., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன்
'கேரளாவில் கண்டிப்பாக நடக்காது. அங்கு, காங்., - கம்யூ.,க்கள் வலுவாக காலுான்றியுள்ளனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கேரள மாநில, பா.ஜ., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி.
தமிழ் மொழி மீது, மத்திய, பா.ஜ., அரசு வன்மத்துடன் செயல்படுவது, தமிழகம் அறிந்தது தான். தமிழக கட்டமைப்புகளை பயன்படுத்தும் கேந்திரிய வித்யாலயாக்கள் அனைத்திலும், தமிழை, ஒன்றாம் வகுப்பு முதல் கற்றுத் தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ
'நல்ல விஷயம் தான்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.
தமிழகம் முழுதுக்குமான, வரைவு வாக்காளர் பட்டியலை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. கட்சியினர் ஒவ்வொருவரும், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, வாக்காளர்களை சேர்ப்பதில், ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.- அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்
'டோக்கன் கொடுத்து ஏமாற்றிய கதையை அவர்கள் அறிந்துள்ளதால், உங்கள் அறிவுரை செல்லாதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.
மதுரை அருகே உள்ள சிவகாசியில் பட்டாசு உற்பத்தி, ௧௦௦ ஆண்டுகளாக நடக்கிறது. 1,௦௦௦ தொழிற்சாலைகள் உள்ளன. டில்லியிலிருந்து மதுரைக்கு, தினமும் இரண்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சிவகாசி பட்டாசுகளால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது எனக் கூறி, தொழிலை முடக்கப் பார்க்காதீர்கள்!- காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்
'உண்மை தான். ஒரு நாளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. அதற்கு பிற காரணிகளும் உள்ளன. அவற்றை சரி செய்த பிறகு, பட்டாசு பக்கம் வாங்க...' என, கூறத் தோன்றும் வகையில், விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE