திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மஹா தீப திருவிழா, நேற்று நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும், கார்த்திகை மஹா தீப திருவிழாவை காண, உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த, 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கால், தீப திருவிழா நாளில் பக்தர்கள் கோவிலுக்குள் வரவும், மலை மீது ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீப திருவிழா தொடங்குவதற்கு முன், திருவண்ணாமலை காவல் தெய்வங்களுக்கு வழிபாடு மூன்று நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்றிரவு நகர காவல் தெய்வமான, சின்னக்கடை தெருவில் உள்ள, துர்க்கையம்மன் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் துர்க்கையம்மனை, பக்தர்கள் தங்களது தோளில் சுமந்தபடி, கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். நிகழ்ச்சியில், சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் குறைவான அளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக கோயிலில் எழுந்தருளும் உற்சவர் துர்க்கையம்மன், மாட வீதிகளில் வலம் வருவது வழக்கம். இந்த நிகழ்வு கொரோனாவால் ரத்து செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE