ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு, பணப்புழக்கம் குறைவால் தீபாவளியின்போது, நான்கு கோடி ரூபாய்க்குள் மட்டுமே, தங்கம் விற்பனையானது.
இது குறித்து, ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் தர்மராஜ் கூறியதாவது: ஊரடங்கு நிலையில், தினம், தினம் தங்கம் விலை உயர்ந்தது. ஜூலை, 28ல், ஒரு பவுன், 40 ஆயிரத்து, 600 ரூபாய் என்றும், 31ல் பவுன், 41 ஆயிரத்து, 400 ரூபாய், ஆக., 4ல் ஒரு பவுன், 43 ஆயிரத்து, 200 ரூபாய், ஆக., 7ல், ஒரு பவுன், 44 ஆயிரத்து, 160 ரூபாய் என உச்சம் தொட்டது. அதன்பின், 39 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் என்ற நிலை நீடித்தது. தற்போது, அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றியால், தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு பதிலாக, டாலரின் மீது முதலீட்டை சர்வதேச வியாபாரிகள் செய்தனர். இதனால் தங்கம் விலை சரிந்து, கடந்த தீபாவளி, அதற்கு முந்தைய நாளில், ஒரு கிராம் தங்கம், 4,860 ரூபாய் என்றும், ஒரு பவுன், 38 ஆயிரத்து, 880 ரூபாயாகவும் இருந்தது. சீட்டு போட்ட நகைக்கடைகளில், நகைகளை வாங்கி உள்ளனர். மற்றபடி, பரிசாக வழங்குதல், நகை, தங்க கட்டி, காயின் போன்றவற்றை வாங்கி வைக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம், கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, தங்கம் விலை உயர்ந்து, ஒரு பவுன், 50 ஆயிரம் ரூபாயை தாண்டும் என, எதிர்பார்த்தபோது கூட, கையில் இருந்த பணத்தை வைத்து பலரும் தங்கத்தை வாங்கினர். தற்போது, மிகக்குறைவாகவே தங்கத்தை வாங்கியுள்ளனர். அதிலும், வெள்ளி பொருட்களைக் கூட குறைந்த அளவே வாங்கினர். இதனால், தீபாவளி, அதற்கு முந்தைய நாளில் கடந்தாண்டுகளில், ஈரோடு மாவட்டத்தில், ஏழு முதல், எட்டு கோடி ரூபாய் வரை, தங்கம், வெள்ளி உள்ளிட்ட வர்த்தகம் நடந்தது. நடப்பாண்டில் தீபாவளி, அதற்கு முந்தைய நாளில், நான்கு கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வர்த்தகம் நடந்துள்ளதால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இதே நிலைதான் மாநில அளவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE