சேலம்: கொரோனாவால், காலண்டர்களுக்கு அரசு துறைகள் ஆர்டர் கொடுப்பதில் காலம் தாழ்த்தி வரும் நிலையில், நெருங்கும் சட்டசபை தேர்தலால், அரசியல் கட்சியினர் அதிகளவில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில், தினசரி, மாதாந்திர காலண்டர் தயாரிப்பு, விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அடுத்து, சேலம், மதுரை, சென்னை ஆகிய இடங்களில் அதிகளவில் நடக்கிறது. பொதுவாக, அக்டோபர் முதல் வாரத்திலேயே காலண்டர் தயாரிப்பு துவங்கி விடும். இதற்காக, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் வர்த்தக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், கூட்டுறவு சங்கங்கள், அதனுடன் தொடர்புடைய வங்கிகள், தொழிலதிபர்கள் காலண்டருக்கு ஆர்டர் கொடுத்து விடுவர். ஆனால், நடப்பாண்டு கொரோனா தாக்கத்தால், மந்தநிலை காரணமாக, காலண்டருக்கான ஆர்டர் அரசு துறைகளிடம் இருந்து எதிர்பார்த்த அளவு இல்லை. தற்போது, அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனங்கள் காலண்டருக்கு ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளதையடுத்து, சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் மாவட்ட ஆப்செட் பிரின்டிங் அசோசியேஷன் நிறுவன தலைவர் முத்து பாலகிருஷ்ணன் கூறியதாவது: கொரோனா காரணமாக, காலண்டருக்கு ஆர்டர் கொடுப்பதை, வியாபாரிகள் உட்பட அனைவரும் தாமதமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள், அதனுடன் தொடர்புள்ள வங்கிகள், அதில் பதவிகளை வகிப்பவர்கள், காலண்டருக்கான ஆர்டரை இன்னும் துவக்கவில்லை. அதே நேரத்தில், வரும் சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு, அரசியல் கட்சியினர் காலண்டர்களுக்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பிற பிரிவுகளில் பதவிகளை வகிப்பவர்கள், தற்போது போட்டி போட்டுக்கொண்டு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதனால், சிவகாசி மட்டுமின்றி, பிற நகரங்களில் காலண்டர் தயாரிப்பு தொழிலில் திடீர் சுறுசுறுப்பு ஏற்பட்டு, இரவு பகலாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், காலண்டர்களுக்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதில், அ.தி.மு.க., முதலிடம், தி.மு.க., இரண்டாமிடம், தொடர்ந்து பா.ம.க.,-தே.மு.தி.க., என அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. கடந்த ஆண்டை விட தற்போது, பா.ஜ., சார்பில் காலண்டர் ஆர்டர் கொடுப்பது, 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE