திருப்பூர்: சபாநாயகர் தொகுதியான அவிநாசியில், 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாகவும், அதில் கிடைக்கும், 25 லட்சம் ரூபாய் யாருக்கு செல்கிறது என்றும் கேட்டு வெளியிடப்பட்ட நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபை சபாநாயகர் தனபால் தொகுதிக்கு உட்பட்ட அன்னுாரில், கடந்த ஒரு வாரமாக ஒரு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதில், 'அன்னுார் ஒன்றியத்தில் மொத்தம் எட்டு மதுக்கடைகள் உள்ளது. இக்கடைகளில் ஒரு நாள் விற்பனை, 8,950 குவாட்டர்கள், 3,300 பீர்கள். அரசு விலையை விட குவாட்டருக்கு, 5 முதல், 7 ரூபாய் வரையும், பீருக்கு, 7 முதல், 10 ரூபாய் வரையும் அதிகமாக வாங்கப்படுகிறது. 'ஒரு நாளுக்கு ஒன்றுக்கு, 77 ஆயிரத்து 750 ரூபாய் வீதம் மாதம், 25 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக வசூல் செய்கின்றனர்.

இவ்வளவு தொகை யாருக்கு போகிறது. விற்பனையாளரை கேட்டால் மேலிடம் என்று சொல்கிறார்கள். நமது எம்.எல்.ஏ.,வும், சபாநாயகருமான தனபால் பதில் அளிப்பாரா' என்று அச்சிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் தனபாலிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது: அவிநாசி தொகுதியில், 2,000 தொகுப்பு வீடு, 4வது குடிநீர் திட்டம், கலைக்கல்லுாரி, அத்திக்கடவு திட்டப்பணிகளை துரிதப்படுத்தியது மற்றும் நலத்திட்ட உதவிகள் என, ஏராளமானவற்றை செய்துள்ளேன். 'டாஸ்மாக்' மதுக்கடை தொடர்பான புகார், இதுவரை எனது கவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து, திருப்பூர், கோவை எஸ்.பி., மற்றும் 'டாஸ்மாக்' மேலாளர்களுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை மாவட்ட 'டாஸ்மாக்' மேலாளர் பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''மதுக்கடைகளில், கூடுதல் விலைக்கு மது விற்பனை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE