கடலுக்குள் வெடித்த குண்டு
குவர்ன்சே கடல் பகுதியில் வெடிகுண்டு ஒன்று இருப்பதை கண்டு அதை இங்கிலாந்து கடற்படையினர் கைப்பற்றினர். 3 அடி நீளமுள்ள அந்த குண்டு, 2ம் உலகப்போரின் போது தயாரிக்கப்பட்டது; நீர்மூழ்கி கப்பலை தாக்க வல்லது என்பதை கண்டுபிடித்தனர். தற்போதும் அது வெடிக்கும் திறனுடன் இருப்பதை கண்ட அவர்கள், கடலுக்குள் வைத்து வெடிக்க செய்தனர்.
தவறி விழுந்த இருவர்
அமெரிக்காவின், மன்ஹாட்டன் நகரில் ஹட்சன் யார்ட்ஸ் என்ற, 101 மாடி கட்டடம் அமைந்துள்ளது. இங்கு, கண்ணாடிகளை சுத்தம் செய்யும் பணியில் இரு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் அமர்ந்திருந்த சாரம் அறுந்து விழுந்ததால் இருவரும் கட்டடத்தின் உச்சியிலிருந்து விழுந்தனர். இதில், படுகாயமடைந்த இருவரையும் தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
'3டி' எலக்ட்ரிக் கார்
இங்கிலாந்தில், '3டி' தொழில்நுட்பம் மூலம் எலக்ட்ரிக் காரை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் காரால், 45 நிமிடங்கள் வரை தொடர்ந்து பயணிக்க முடியும். பேட்டரி மூலம் இயங்கும் இந்த கார், 150 கிலோ எடை கொண்டது. 'கெமிலியான்' என பெயரிடப்பட்ட இந்த கார், அடுத்த ஆறு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என, அதை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவியை காப்பாற்றிய அதிகாரி
சீனாவில், காங்கிங் நகரில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக கால் தவறி ஓடும் ஆற்றில் விழுந்துள்ளார். உதவி கேட்டு அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போதும், வேடிக்கை பார்த்தவர்களில் யாரும் உதவ முன் வரவில்லை. இந்நிலையில், அவ்வழியாக சென்ற சீனாவுக்கான இங்கிலாந்து துாதரக அதிகாரி ஸ்டீபிம் எலிசன் துணிச்சலுடன் ஆற்றில் குதித்து அந்த மாணவியை காப்பாற்றினார். தற்போது, இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE