சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
உடுமலை பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
அமராவதி அணையில், மொத்தமுள்ள, 90 அடியில், 68.08 அடி நீர் மட்டமும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 2,257.68 மில்லியன் கன அடி நீர் இருப்பும் இருந்தது. அணைக்கு, வினாடிக்கு, 565 கன அடி நீர் வரத்து இருந்தது. பாசன பகுதிகளில் தொடர் மழை காரணமாக, அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு வாரத்தில் அணை நீர் மட்டம், 4 அடி உயர்ந்துள்ளது.
திருமூர்த்தி அணையில், மொத்தமுள்ள, 60 அடியில், நேற்று காலை நிலவரப்படி, 43.37 அடி நீர் மட்டம் இருந்தது. நீர் இருப்பு, 1,267.54 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 822 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்கு, 219 கன அடி நீர் திறக்கப்பட்டது. உடுமலை பகுதியில் மொத்தமுள்ள 9 குளங்களில், 5 குளங்களில், 50 சதவீதத்திற்கும் மேல் நீர் இருப்பு உயர்ந்துள்ளது.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில், தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால், மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. கடந்த சில நாட்களாக, வடகிழக்கு பருவமழையும், பெய்து வருவதால், கிராமப்புறங்களில் உள்ள குளங்களுக்கும், அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறை அருகே சோலையாறு அணை, 160 அடி கொள்ளளவில், 153.94 அடியாக உள்ளது. 15 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் மொத்தம் உள்ள, 72 அடியில், 69.68 அடியாக உள்ளது. 26மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. ஆழியாறு அணை, 120 அடியில், 114.80 அடியாக உள்ளது. 6.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
நீலகிரியில் நிரம்பி வரும் அணைகள்
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில், குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார் பகுதிகளில் மழை அதிகமாக பெய்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, கோடநாடு, 40 மி.மீ, குன்னுார், 35 மி.மீ, கெத்தை, 35 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.அப்பர்பவானி, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி, பைக்காரா, கிளன்மார்கள், மாயார் உட்பட, 13 அணைகளில், 85 முதல் 95 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.
இங்குள்ள, 30 தடுப்பணைகளும் நிரம்பியுள்ளன. இதை தவிர, கோத்தகிரி ஈளாடா தடுப்பணை, மசினகுடி மாயார் மரவக்கண்டி அணையிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.மழை தொடரும் பட்சத்தில், அணைகளை திறந்து உபரிநீர் வெளியேற்ற மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தினசரி மின் உற்பத்தி, 650 மெகாவாட் வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'அணைகளில், 90 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. இன்னும், ஆறு மாதங்களுக்கு தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்' என்றனர்.

குளங்களுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து
கடந்த சில நாட்களாக, திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், தாழ்வான பகுதிகள், குளம், குட்டை உட்பட நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் தேங்கி உள்ளது. 60 ஏக்கர் பரப்பில் ஆண்டிபாளையம் குளம் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி, உபரி நீரும் வெளியேறி வருகிறது.சாமளாபுரம் குளம், 70 சதவீதம், பள்ளபாளையம், 10 சதவீதம், மண்ணரை குளம், 65 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
பொதுப்பணித்துறையினர் கூறியதாவது: நொய்யல் ஆற்றில், ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. மாறாக, ஆண்டுக்கு, 10 மாதங்கள் வரை, கோவை அடுத்த ஆலந்துறை வரை மட்டுமே தண்ணீர் வரத்து காணப்படும். மாறாக, மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கோவை சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தால் மட்டுமே நொய்யலில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.நொய்யல் ஆறு கடக்கும் நான்கு மாவட்டங்களில், ஆற்றின் குறுக்கே, 23 அணைக்கட்டுகள் வாயிலாக, 31 குளங்கள் உள்ளன. தற்போது, பரவலாக மழை பெய்து வந்தாலும், திருப்பூர் மாவட்ட குளங்களுக்கான தண்ணீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது. கனமழை பெய்து, நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே பெருமளவு குளங்கள் நிரம்பும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பருவமழையால் நிரம்பும் காஞ்சி, செங்கை ஏரிகள்
சென்னை : காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பல ஏரிகள் நிரம்பி வருவதால், பொதுப்பணித்துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து, செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை பராமரிப்பில், 908 ஏரிகள் இருந்தன. மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதால், தற்போது காஞ்சிபுரத்தில், 381 ஏரிகள் மட்டுமே உள்ளன. இதில், 92 ஏரிகள் வாயிலாக பாசனம் நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், 527 ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள ஏரிகளுக்கு, தொடர்ந்து நீர்வரத்து கிடைத்து வருகிறது.இதனால், ஏரிகள் நிரம்பி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, காஞ்சிபுரத்தில், 38 ஏரிகள் முழுக்கொள்ளளவு நிரம்பியுள்ளது. அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. மொத்தத்தில், 90 சதவீதம் ஏரிகள், 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. மேலும், 183 ஏரிகள் பாதி கொள்ளளவிற்கு மேல் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், 29 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளன. மேலும், 37 ஏரிகள், 75 சதவீதத்திற்கு அதிகமாகவும், 37 ஏரிகள் பாதி கொள்ளளவிற்கு மேலும் நிரம்பியுள்ளன. வடகிழக்கு பருவமழை முடிவதற்கு கால அவகாசம் இருப்பதால், அதற்குள் அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால், பொதுப்பணித்துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பெரியகுளம் சோத்துப்பாறை அணை மீண்டும் நிரம்பியது
சோத்துப்பாறை அணையின் மொத்த உயரம் 126 .28 அடி. கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழையால் அணைக்கு தண்ணீர் வருகிறது. அக். 26ல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.அப்போது அணையின் நீர் மட்டம் 121.68 அடி.
இரண்டாம் முறை
நீர்பிடிப்பு பகுதியில் மழை காரணமாக நவ. 6ல் அணை முழுவதுமாக 126.28 அடியும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.நவ. 10 வரை பாய்ந்த நிலையில் நவ. 11ல் நின்றது. நீர் பிடிப்பு பகுதியில் இரு நாட்களாக மழை பெய்ததால் அணை மீண்டும் நிரம்பி நேற்று முன்தினம் மாலை 4:00 மணி முதல் இரண்டாம் முறையாக 7 கனஅடி நீர் மறுகால் பாய்கிறது. அணையில் மழையளவு 23 மி.மீ., நீர் வரத்து வினாடிக்கு 37 கனஅடியாகவும், பாசனத்திற்குவினாடிக்கு 30 கனஅடி நீர் வெளியேறுகிறது. விவசாயிகள் உற்சாகமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சண்முகாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சண்முகாநதி அணை நீர் மட்டம் வடகிழக்கு பருவமழை காலங்களில் முழு கொள்ளளவான 52.5 அடியை எட்டும். அதன்படி 2019 அக். 30 ல் நிரம்பியது. ஆனால் இந்தாண்டு நவம்பர் மூன்றாவது வாரத்திலும் நிரம்பவில்லை. அணைக்கு நீர்வரத்து 8 கனஅடியாக இருந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக ைஹவேவிஸ் மலைப்பகுதியில் தொடர் சாரல் பெய்து வருவதால் அணைக்கு நேற்று திடீரென நீர்வரத்து 18 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 36.30 ல் இருந்து 37 அடியாக உயர்ந்தது. மழை தொடரும் பட்சத்தில் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூல வைகையில் நீர்வரத்து
வருஷநாடு மலைப்பகுதியில் மழையால் மூலவைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, வெள்ளிமலை உட்பட வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருந்து வரும் நீர் வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனுார் வழியாக வைகை அணை சென்று சேரும். ஆற்றில் நீர் வரத்தால் கரைப்பகுதி விவசாய கிணறுகள், குடிநீர் உறைகிணறுகளில் நீர் சுரப்பு அதிகரித்து வருகிறது.
நிறைந்தது விருதுநகர் தெப்பம்
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் தெப்பம் நிறைந்து மறுகால் பாய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் நகராட்சிக்கு உட்பட்ட 16 வார்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பழமையான, புராதான சிறப்பு மிக்க இத்தெப்பத்தின் மையத்தில் மண்டபம் உள்ளது. 22 அடி நீர் மட்டம் கொண்ட இதை பலசரக்கு மகமை முறைகாரர்கள் நிர்வகிக்கின்றனர்.முன்பு மழைக் காலங்களில் இறைப்ப நாயக்கர் ஊரணி, பேராலி, சின்ன பேராலி உள்ளிட்ட பகுதிகளில் 3500 ஏக்கர் தரிசு நிலத்தில் பெய்த மழை நீர் தெப்பத்தை நிறைத்தது.
நிரம்பியது கொடைக்கானல் ஏரி
கடந்த வாரம் முதல் கொடைக்கானல் பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதையடுத்து 26 அடி உயரமுள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டியது. நேற்றிரவு முதல் உபரிநீர் திறக்கப்படுவதால் கொடைக்கானல் எம்.ஜி.ஆர்., நகர், வண்ணான் துறை, பேத்துப்பாறை, அஞ்சு வீடு மற்றும் கரையோரம் உள்ளோர் பாதுகாப்பாக இருக்கும் படி கமிஷனர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தடுப்பணைகள் நிரம்பின; விவசாயிகள் மகிழ்ச்சி!
தற்போது பெய்து வரும் கனமழையால், காரமடை பகுதியில் தடுப்பணைகள் நிறைந்துள்ளன. பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதியில் பெய்யும் மழைநீர், ஏழு எருமை பள்ளம் வழியாக, வீரபாண்டி, மத்தம்பாளையம், காரமடை சிக்காரம்பாளையம், பெள்ளாதி, ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம், இலுப்பநத்தம் ஆகிய ஊராட்சி பகுதிகள் வழியாக, சிறுமுகை அருகே பவானி ஆற்றில் கலக்கிறது.
கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், சிக்காரம்பாளையம் ஊராட்சியில், கருப்பராயன் நகர், கன்னார்பாளையம், காளட்டியூர் ஆகிய பகுதிகளில், ஏழு எருமை பள்ளத்தில் கட்டியுள்ள தடுப்பணைகள் நிறைந்தன.ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், பெள்ளாதி ஊராட்சியில், இப்பள்ளத்தில் கட்டியுள்ள, பெள்ளாதி, மொள்ளேபாளையம், தேரம்பாளையம் தடுப்பணைகள் நிறைந்துள்ளன. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில், நீரூற்று அதிகளவில் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூரில் நிரம்பும் நீர்நிலைகள்
கடலூர் மாவட்டத்தில் பெரிய ஏரியான வீராணம் ஏரி 47.50 அடிக்கு இதுவரை 45.60 அடி நிரம்பியுள்ளது. வினாடிக்கு 2,146கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு 66 கனஅடி தண்ணீரும், மற்ற பாசனத்திற்காக பல்வேறு மதகுகள் வழியாக 1,067 கன அடியும் திறந்து விடப்படுகிறது.வாலாஜா ஏரியில் 5.50 அடியில் 5 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. பெருமாள் ஏரியில் 6.50 அடியில் 6.1 அடி தண்ணீர் உள்ளது. வெலிங்டன் ரிசர்வாயரில் 29.78 அடிக்கு 11.90 தண்ணீர் நிரம்பியுள்ளது.கடலுார் மாவட்டத்திலுள்ள 228 ஏரிகளில் 21 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. 91 சதவீதம் முதல் 99 வரை 3 ஏரிகளும், 90 சதவீதம் வரை 3 ஏரிகளும், 80 சதவீதம் வரை 14 ஏரிகளும், 70 சதவீதம் வரை 12 ஏரிகளும், 50 சதவீதம் வரை 59 ஏரிகளும், 25 சதவீதம் வரை 44 ஏரிகளும் நிரம்பியுள்ளன.
அச்சிறுப்பாக்கம் வட்டாரத்தில் வேகமாக நிரம்பும் குளங்கள்
கன மழை காரணமாக, மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.இதில், 2019 - -20ம் ஆண்டில், குடிமராமத்து பணி மேற்கொண்ட ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன.அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சார்பில் துார் வாரப்பட்ட மூன்று பொது குளங்களும், கருங்குழி பேரூராட்சியில், ஒன்பது குளங்களிலும் தண்ணீர் நிரம்பி உள்ளதால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வந்துக்கொண்டிருப்பதால், குறிப்பிட்ட சில ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சி தண்டலத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் புதிதாக அமைத்த குளத்தில், மழை நீர் நிரம்பியுள்ளது.
பாலாற்று தடுப்பணை நிரம்பியது
செங்கல்பட்டு மாவட்டத்தில், சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், பாலாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஏரிகளில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், புதுப்பட்டினம், புலியூர், கோரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், ஒன்பது ஏரிகள் நிரம்பின. பல பகுதிகளில் பெருக்கெடுத்த மழை நீர், கால்வாய்கள் வழியே, பாலாற்றில் கலந்து, கரைபுரள்கிறது.நீர்வரத்து காரணமாக, முகத்துவார, கடலுார் - வாயலுார் படுகையில் கட்டப்பட்ட, நீர்செறிவூட்டல் தடுப்பணை பகுதியில், முழு கொள்ளளவு, 5 அடி ஆழம் நிரம்பியது. இதன் உபரி நீர் வெளியேறி, கடலில் கலந்து வருகிறது.
கடலில் வீணாக கலக்கும் தாமிரபரணி ஆற்று நீர்

கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வரும் நிலையில்தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு வெளியேறி வருகிறது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (18-11-2020)
பாபநாசம்
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 117.20அடி
நீர் வரத்து : 6813.45கனஅடி
வெளியேற்றம் : 359.75 கனஅடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 135.69அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 89.50 அடி
நீர் வரத்து : 2992.கனஅடி
வெளியேற்றம் : 25 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 49 அடி
நீர் இருப்பு: 13அடி
நீர் வரத்து: 33.55 கன அடி
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 09.35 அடி
நீர்வரத்து: 7.52 கன அடி
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 36 அடி
நீர்வரத்து: 83 கன அடி
வெளியேற்றம்: 50 கன அடி
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (18-11-2020)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 83அடி
நீர் வரத்து : 1387கன அடி
வெளியேற்றம் : 1145 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 80.50 அடி
நீர்வரத்து : 452 கனஅடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 69.59 அடி
நீர் வரத்து : 403 கன அடி
வெளியேற்றம் : 400 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 135 கன அடி
வெளியேற்றம்: 135 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 101.50அடி
நீர் வரத்து 140 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE