சென்னை: மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், மீனவர்கள் நல அமைப்பின் பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கு ஆகியவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, 'நவம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், டிசம்பர் முதல் வாரத்திற்குள் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றமே உரிய உத்தரவு பிறப்பிக்கும் என தெரிவித்தனர். மேலும், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டரை திறக்க தனி நீதிபதி தடைவிதித்த வழக்கும் இதே நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 900 தள்ளுவண்டிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், லூப் சாலை மற்றும் மீன் சந்தைகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE