நாமக்கல்: நாமக்கல்-மல்லியக்கரை வரை சாலை விரிவாக்கப்பணிக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் நில உரிமையாளர்களிடம், திட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சென்னை-கன்னியாகுமரி தொழிற்திட்டமானது, தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், மாநில சாலைகளை விரிவாக்கம் செய்வதாகும். அதன்படி, மோகனூர் முதல், நாமக்கல் வரையிலான சாலை விரிவாக்கப்பணி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, நாமக்கல்-முத்துகாப்பட்டி - தாதம்பட்டி மேடு முதல், ஆத்தூர் மல்லியக்கரை வரை, தற்போதுள்ள, ஒரு வழிப்பாதையை, இரு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படுகிறது. இதுவரை, தொட்டியம்பட்டி, கல்குறிச்சி, முத்துக்காப்பட்டி, பள்ளிப்பட்டி ஆகிய கிராமங்களில், நிலம் கையகப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு, உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 14 கிராமங்களில், நிலம் எடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பொம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சிலர், நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 'நில உரிமையாளர்களை வரவழைத்து, மறு விசாரணை மேற்கொண்டு, நில எடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும்' என, நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதையடுத்து, தொழிற்தடத்திட்டத்தின், சேலம் மண்டல சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சாலைப்பணி கோட்டப் பொறியாளர் வத்சலா வித்யாலட்சுமி, தாசில்தார்கள், உதவி கோட்டப் பொறியாளர் உள்ளிட்டோர், நேற்று நாமக்கல் வருகை தந்தனர். தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் உள்ள, தனி தாசில்தார் அலுவலகத்தில், நிலம் எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பொம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த, நில உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE