கரூர்: ''சிறப்பு முகாம் மூலம், 72 ஆயிரம் கால்நடைகளுக்கு, சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் மலர்விழி பேசினார். கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்குட்பட்ட, வளையல்காரன்புதூரில், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் மலர்விழி துவக்கி வைத்து பேசியதாவது: சிறப்பு முகாம்கள் வரும் ஜன., 24 வரை, 72 கிராமங்களில் நடக்கிறது. ஒரு கிராமத்திற்கு ஆடு, மாடு, கோழி என, 1,000 கால்நடைகள் வீதம் மொத்தம், 72 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், சினையுறா மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை, சினையுற்ற மாடுகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படும். ஆண்மை நீக்கம், ஆடுகளுக்கான ஆட்கொல்லி நோய் தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி போடுதல், மாடுகளுக்கு மலடுநீக்க சிகிச்சை, மடிநீக்க நோய் சிகிச்சை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கால்நடை பராமரிப்பு துறை வல்லுநர்கள், கால்நடைகளை முறையாக பராமரிப்பது குறித்து விளக்குவர். முகாமிற்கு அழைத்து வரப்படும் கால்நடைகளில், நல்ல நிலையில் பராமரிக்கப்படும் சிறந்த கலப்பின கன்றுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர்கள் சரவணக்குமார், முரளிதரன், லில்லி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE