ஒஸ்லோ: நார்வேயில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் நோபல் பரிசு விழாவில் பங்கேற்க இயலாது என அமைதிக்கான பரிசை பெறும் உலக உணவுத் திட்ட தலைவர் அறிவித்துள்ளார்.

ஸ்வீடன் வேதியிலாளர் ஆல்பிரட் நோபலின் நினைவாக நோபல் பரிசு வழங்கபப்டுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் இப்பரிசு அறிவிக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான பரிசு பெற்றோர் விவரங்கள் வெளியாகிவிட்டன. டிச., 10-ல் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறும் விழாவில் இப்பரிசு வழங்கப்படும். இம்முறை கொரோனா தொற்று பரவல் காரணமாக வழக்கமான முறையில் விருது விழா நடைபெறாது என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
நார்வேயில் ஆரம்பத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. கடந்த இரண்டு வாரங்களில் தொற்று அதிவேகமாக உயர்ந்து வருகிறது. மொத்தம் 30,000-க்கும் மேற்பட்டவர்களிடம் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 298 பேர் இறந்துள்ளனர். ஐ.நா. நிறுவனத்தின் முன்கள பணியாளர்கள் பலருக்கும் சமீபத்தில் தொற்று ஏற்பட்டது. இச்சூழலில் அமைதிக்கான நோபல் பரிசை பெற முடியாது என உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி அறிவித்துள்ளார். இத்தகவலை நோபல் அறக்கட்டளை தெரிவித்தது.

ரோமை தலைமையிடமாக கொண்டது ஐக்கிய நாடுகளின் உணவு உதவி திட்டம் அமைப்பு. உலகின் மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பாக உள்ளது. பசியின்மை மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்து இவ்வமைப்பின் நோக்கம் ஆகும். 2019-ம் ஆண்டில் 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி மக்களுக்கு உதவி செய்துள்ளது. உலக அமைதிக்கும் பசியின்மையையும் தொடர்புப்படுத்தி செயல்பட்டதால் இவர்களுக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE