புதுடில்லி : 'பீஹார் சட்டசபை தேர்தல் படுதோல்வியை அடுத்து, காங்கிரஸ் கட்சி, சுய பரிசோதனை செய்யும் காலம் முடிந்துவிட்டது. நாட்டு மக்கள் காங்.,கை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை' என, அக்கட்சியின் மூத்த தலைவர், கபில் சிபலின் கருத்துக்கு, காங்., - எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி தந்துள்ளார். ''கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி இருப்பவர்கள், கட்சியை விட்டு தாராளமாக வெளியேறலாம்,'' என கூறியுள்ளார். இது, கட்சிக்குள் பிளவை மேலும் அதிகரித்துள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து, 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும், 19 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த தேர்தலில் காங்., 27 இடங்களில் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. காங்.,கின் இந்த சரிவு, அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்கு சரியான தலைமை இல்லாததே இந்த தடுமாற்றத்துக்கு காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்நிலையில் காங்., கட்சியின் செயல்பாடுகள் குறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர், கபில் சிபல் சமீபத்தில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் உள்ள அனுபவமிக்க தலைவர்கள், அரசியல் களச்சூழலை அறிந்தவர்கள் கட்சியை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்யும் காலம் முடிந்துவிட்டது. பீஹார் தேர்தல் மற்றும் பிற மாநில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மோசமாக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக என்ன தவறு இருக்கிறது என்பது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள் அந்த தவறை ஏற்க மறுக்கிறார்கள். களத்தில் நிலவும் சூழலை அவர்கள் ஏற்காவிட்டால், காங்., கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகும். பீஹார் தேர்தல் முடிவைப் பார்த்தபின், நாட்டு மக்கள் காங்., கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை எனத் தெரிகிறது. இவ்வாறு, அவர் கூறியிருந்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர், ஆதரவாகவும், எதிராகவும், சமூகவலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்தனர்.
'நம்மை நாமே சுய பரிசோதனை செய்து, கலந்துபேசி, செயலில் இறங்க வேண்டிய நேரம் இது' என, காங்., - எம்.பி., கார்த்தி தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டார்.
காங்., மூத்த தலைவர், சஞ்சய் நிருபம் கூறுகையில், 'பீஹார் சட்டசபை தேர்தல் தொடர்பாக, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டவர்களே, இந்த தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்' என்றார்.
இந்நிலையில், கபில் சிபல் கருத்து குறித்து, மேற்கு வங்கத்தை சேர்ந்த, காங்., மூத்த தலைவரும், லோக்சபா காங்., கட்சி தலைவருமான, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் மற்றும் சுய பரிசோதனை குறித்து, கபில் சிபல் மிகவும் கவலை கொண்டுஉள்ளார். அவ்வளவு அக்கறை உள்ளவரின் முகத்தை, பீஹார் சட்டசபை மற்றும் பிற மாநில இடைத்தேர்தல்களில், பார்க்க முடியவில்லையே?வெறும் பேச்சு மட்டும் பிரச்னைகளுக்கு தீர்வாகாது. பீஹார் மற்றும் ம.பி., தேர்தல் பணிகளில், கபில் சிபல் ஈடுபட்டு இருந்து, அதன் பின், இந்த கருத்தை கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியும்.கட்சிப் பணியில் ஈடுபடாமலேயே, வெறும் கருத்து மட்டும் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கட்சியின் செயல்பாட்டில் திருப்தி இல்லாதவர்கள், தாராளமாக வெளியேறலாம். அதைவிடுத்து, பொது வெளியில், கட்சியை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
கபில் சிபல், ஆதிர் ரஞ்சன் இடையிலான மோதலுக்கு, காங்கிரஸ் தரப்பில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இது கட்சியில் பிளவை மேலும் அதிகரித்துள்ளது.
களத்தில் வலுவாக இல்லை: சிதம்பரம் கருத்து
கபில் சிபல் கருத்துக் குறித்து, ஹிந்தி நாளிதழ் ஒன்றுக்கு, காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:பீஹார் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் -- காங்., கூட்டணி எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும். மிகவும் சொற்ப எண்ணிக்கையில் தோல்வி அடைந்துள்ளோம். இது குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். பீஹாரில், காங்கிரஸ் கட்சிக்கு உள்ள பலத்தை காட்டிலும், அதிக இடங்களில் போட்டியிட்டதாக நினைக்கிறேன். நாம், 70 இடங்களுக்கு பதில், 45 இடங்களில் மட்டுமே போட்டியிட்டு இருக்க வேண்டும். அதோடு, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கடந்த, 20 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வரும், 25 தொகுதிகள், காங்.,குக்கு வழங்கப்பட்டன. இந்த தொகுதிகளில் போட்டியிட நாம் மறுத்திருக்க வேண்டும். வேறு தொகுதிகளை கேட்டு பெற்றிருக்க வேண்டும். பீஹாரை காட்டிலும், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் அதிக கவலை அளிக்கின்றன. அந்த மாநிலங்களில், களத்தில் நாம் வலுவாக இல்லை. பலவீனமடைந்து விட்டோம் என்பதையே இந்த முடிவுகள் உணர்த்துகின்றன. அடிமட்ட அளவில் கட்சியை நாம் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE