
மேகங்கள் கூடி குழாயை திறந்துவிட்டது போல பெருந்துாறலுடன் மழை பெய்கிறது, குறைந்தது ஒரு மணி நேரமாவது பெய்யும் என்று நினைத்து ஒதுங்கினால் அடுத்த நிமிடமே சட்டென மழை நிற்கிறது. ஏன் எல்லோரும் ஓதுங்கி நிற்கிறீங்க? என்று விசாரித்தபடி வெயில் சுள்ளென்று அடித்தபடி எட்டிப் பார்க்கிறது, எனக்கெதுவும் தெரியாதுப்பா என்றபடி மேகங்கள் ஒடி ஒளிகிறது.. இதுதான் இப்போதைய சென்னையின் பகல் பொழுது

இந்த இனிய பொழுதில் செய்தி தேடி சென்று கொண்டிருந்தவனின் கண்களில் பம்மல் அண்ணாநகர் காந்தி தெரு கதவிலக்கம் ஐந்தின் வாசலில் ஒரு வித்தியாசமான காட்சி தென்பட்டது.
நான்கைந்து மாடுகள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தன அவைகளுக்கு ஒரு தம்பதியினர் பொறுமையாக கீரையை உணவாக கொடுத்துக் கொண்டிருந்தனர் அந்த மாடுகள் கீரையை சாப்பிட்டு சென்றதும் அடுத்து ஒரு செட் மாடுகள் வந்தன அவைகளுக்கும் கீரை மற்றும் காய்கறிகள் உணவாக கொடுக்கப்பட்டது.
இதில் என்ன விசேஷம் என்றால் இந்த மாடுகள் அனைத்தும் தெருவில் திரியக்கூடியவை இவைகளுக்கும் இந்த தம்பதியினருக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை
கொரோனா காலத்தில் பிறந்த இரக்கமே இதற்கு காரணம்.
சீனியர் சிட்டிசனான நீலகண்டன் தனது மனைவி காயத்ரியுடன் இணைந்து பம்மல் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்களுக்கு, வீட்டில் சமைத்த உணவை வழங்கி வருகின்றனர்.குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் இவர்கள் தரும் உணவிற்கு இந்தப் பகுதயில் உள்ள நிறைய முதியவர்கள் 16 வருடங்களுக்கு மேலாக வாடிக்கையாளராக இருக்கின்றனர்.
கொரோனா காலத்தில் இவர்களது சேவை இந்தப் பகுதியில் உள்ள முதியவர்களுக்கு மட்டுமல்லாது பலருக்கும் தேவையாக இருந்தது.வீடு வீடாகப் போய் உணவு வழங்கிவிட்டு வீடு திரும்பும் போது ஒரு விஷயம் நீலகண்டன் கண்ணை உறுத்தியது தன் வீட்டு வாசலில் படுத்துக்கிடந்த இரண்டு மாடுகள் உணவு கிடைக்காமல் ஒரு கரித்துணியை சண்டையிட்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தன.
மனது தாங்காமல் விடு விடுவென வீட்டிற்குள் போய் சமையலுக்கு வைத்திருந்த காய்கறிகளை நறுக்கிக் கொண்டு வந்து போட அந்த வாயில்லாத ஜீவன்கள் ஆசை ஆசையாய் அதை அசைபோட்டு சாப்பிட்டன நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல உணவும் தண்ணீரும் கிடைத்த சந்தோஷத்தோடு நீலகண்டன்-காயத்ரி தம்பதிக்கு கண்களால் நன்றி சொல்லி சென்றன.
சரி அன்றோடு முடிந்தது என்று பார்த்தால் மறுநாள் பகல் சரியாக அதே நேரத்திற்கு அதே மாடுகள் வந்து நின்றன மேலும் ‛வா எங்களோடு இந்த வீட்டில் நமக்கு ஏதாவது சாப்பிட தருவாங்க' என்று சொல்லி கூட்டி வந்தது போல கூடுதலாக இரண்டு மாடுகளும் வந்திருந்தன.
நம்மை நம்பி வந்த இந்த வாயில்லாத ஜீவன்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தம்பதியினர் முடிவு செய்து தாங்கள் சாப்பிட வாங்கி வைத்திருந்த கீரை உள்ளீட்ட காய்கறிகளை வழங்கினர்.அன்று நான்கு மாடுகளாக சென்றவை மறுநாள் ஆறு மாடுகளாக வந்தன இப்படியே பத்து மாடுகள் வரை அன்றாடம் வருகின்றன.
அன்றாடம் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து எங்கள் உழைப்பை துவங்கிவிடுவோம் எங்கள் தொழிலில் நாங்கள் இரண்டு பேர்தான் தொழிலாளி முதலாளி எல்லாம் எங்களை நம்பி உடல் நலம் இல்லாதவர்களும் இருப்பதால் தீபாவளி பொங்கலுக்கு கூட விடுமுறை கிடையாது
இப்படி கடுமையாக உழைத்தாலும் வருமானம் குறைவுதான் ஆனால் அந்த வருமானத்தில் பாதிக்கு மேல் இந்த வாயில்லாத ஜீவன்களுக்கு கீரை காய்கறி வாங்கிப் போடுவதற்கு ஒதுக்கிவிடுகிறோம் இந்த மாடுகளின் உரிமையாளர்கள் இதற்கு தீனி போடாமல் மேய்ச்சலுக்கு துரத்திவிடுகின்றனர் கிராமமாக இருந்தால் புல்வெளியில் மேயும் நகரபகுதிகளில் பாவம் போஸ்டர்களையும் காய்கறி கடை கழிவுகளையும் மட்டுமே சாப்பிடுகின்றன.இந்த கொரோனா காலத்தில் அதுவும் கிடைக்காமல் பாவம் பசியோடு கண்டதையும் சாப்பிட்டு திரிகின்றன நாங்கள் உணர்ந்ததால் கொடுக்கிறோம் உணர்வோடு கொடுக்கிறோம்.
மனிதர்கள் வாய்விட்டு பசிக்கிறது என்று கேட்டுவிடுவர் ஆனால் வாயில்லாத இந்த ஜீவன்கள் எங்கு போய் கேட்கும் ஏதோ எங்களால் முடிந்ததை கொடுக்கிறோம் இந்த வீட்டிற்கு போனால் நமக்கும் சாப்பாடு கிடைக்கும் என நினைத்து இப்போது நாய் பூனைகள் எல்லாம் வருகின்றன அவைகளுக்கும் பிஸ்கட் பால் வாங்கிக் கொடுக்கிறோம் ஏதோ இவைகளின் பசியாற்றும் இடத்தில் நம்மை இறைவன் வைத்திருக்கிறானே என்று மனத்திருப்தி அடையும் இந்த தம்பதியினரிடம் பேசுவதற்கான எண்கள்:8807735133, 9841870906.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE