''கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அவர்களின் குழந்தைகளுக்கு, இந்த ஆண்டு மருத்துவ படிப்பில், மத்திய தொகுப்பிலிருந்து, ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்,'' என, மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
டில்லியில் நேற்று, தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் கருத்தரங்கு ஒன்றில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:மிகக் கொடிய கொரோனா தொற்று நோயை எதிர்த்து, களத்தில் நிற்கும் முன்களப்பணியாளர்களைப் பார்த்து, நாடு பெருமை கொள்கிறது. அவர்களின் அசாதாரணமான, இந்த தன்னலமில்லாத பங்களிப்பு, போற்றப்பட வேண்டும்.
நம்பிக்கை
மனித குலத்திற்கு, அவர்கள் செய்யும் மகத்தான சேவை மற்றும் தியாகத்திற்கு மதிப்பு அளிக்கும் நோக்கில், இந்த 2020 - -21ம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்புகளில், மத்திய தொகுப்பிலிருந்து ஐந்து இடங்களை, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.
முன்களப் பணியாளர் களாக, நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு, இந்த வாய்ப்பு வழங்கப்படும். மத்திய அரசு பிரிவிலிருந்து, 'வாட்ஸ் ஆப் கோவிட் வாரியர்ஸ்' என்ற பெயரில், இந்த ஒதுக்கீடு வழங்கப்படும்.
'நீட்' தேர்வு எழுதி, தரவரிசையில் இடம்பெற்று, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் செய்துள்ள, தகுதியான இந்த மாணவர்களை, இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் உரிய வகையில் தேர்வு செய்வர்.
கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ளும் விஷயத்தில், ஊரடங்கு உட்பட, தைரியமான பல முடிவுகளை, மத்திய அரசு எடுத்தது. முக கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றுக்கு, துவக்கத்தில் பற்றாக்குறை நிலவியது.இதை, வெகு எளிதாக போக்கியதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு, இந்தியா நிமிர்ந்தது. தடுப்பூசி தயாரிப்பதில், சர்வதேச ஆராய்ச்சிகளை விட, நம்நாட்டு விஞ்ஞானிகள், முன்னணியில் உள்ளனர்.கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி தயாராகும் நடவடிக்கைகளை, மத்திய அரசு மிகுந்த கவனத்துடன், கண்காணித்து வருகிறது.
இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. உலக சுகாதார மையம் நிர்ணயித்துள்ள தரத்தையும், பல்வேறு விதிகளையும் பூர்த்தி செய்யும் வகையில், நம் நாட்டில் தயாராகி வரும் தடுப்பூசிகள் உள்ளன.தடுப்பூசி தயாரானதும், யார் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்தும், அரசு பல்வேறு அம்சங்களை கவனத்துடன் ஆராய்ந்து வருகிறது.
தீவிரம்
முன்னுரிமை அளிக்கும் விஷயத்தில், முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் அமைந்த அணுகு முறைகளை பின்பற்ற, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மருத்துவ பணியில் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு முன்னுரிமை தரப்படும்.தடுப்பூசியை, பொதுமக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது மிகப்பெரிய காரியம். எனவே, இது குறித்த நடவடிக்கைகளுக்கு திட்ட அறிக்கை தயார் செய்வது உட்பட, விரிவான முன்னேற்பாடுகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
யாருக்கு முதலில் தடுப்பூசி?
கொரோனா வைரஸ் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பங்கேற்ற, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு, ஆக., மாதத்துக்குள், 50 கோடி, 'டோஸ்' தடுப்பூசிகள் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்; இதை, 30 கோடி பேருக்கு வழங்க முடியும்.
அதனால், யாருக்கு முதலில் தடுப்பூசியை அளிப்பது என்பதை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. அதன்படி, வைரசுக்கு எதிராக செயல்பட்டு வரும், டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.அதன்பின், 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, 50 - 60 வயதுக்குட்பட்டோருக்கும், வேறு வியாதிகள் உள்ள, 50 வயதுக்குட்பட்டோருக்கும் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
யாருக்கு கிடைக்கும்?
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான மருத்துவ படிப்பு ஒதுக்கீடு குறித்து, மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:மருத்துவ படிப்புகளில், ஒவ்வொரு மாநில அரசு தரப்பிலிருந்தும், மத்திய தொகுப்புக்கு, குறிப்பிட்ட அளவு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்களில், குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு உள்ளது.இதில், ஐந்து இடங்களை கொரோனா முன் களப் பணியாளர்களுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, நீட் தேர்வு எழுதி, தரவரிசையில் இடம் பெற்றுள்ள, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு பலியானோரின் குழந்தைகள் குறித்த பட்டியலை, மாநில அரசுகளிடம், மத்திய அரசு கோரியுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு பலியான, துப்புரவு தொழிலாளியிலிருந்து, டாக்டர்கள் வரையிலானோரின் குழந்தைகள், இதற்கு தகுதியானவர்களாக கருதப்படுவர்.ஆனாலும், இந்த ஒதுக்கீடு குறித்து முழுமையான, தெளிவான விபரங்கள், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE