திருநெல்வேலி : தி.மு.க., கோஷ்டி பூசலில் தாக்குப்பிடிக்க முடியாமல்,ஆலங்குளம் எம்.எல்.ஏ., பூங்கோதை,நேற்று துாக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., பூங்கோதை. மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள். 2006 தேர்தலில் வெற்றி பெற்ற பூங்கோதை, சமூகநலத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தார்.
பின், 2011 தேர்தலில்தோல்வியடைந்த அவர், 2016ல், மீண்டும்வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்; ஆலங்குளத்தில், குடும்பத்தினர் நடத்தும் நர்சிங் கல்லுாரி வளாகத்தில் தங்கியுள்ளார்.நேற்று முன்தினம் இரவில், அங்கு அதிக துாக்க மாத்திரைகளை உட்கொண்டு, பூங்கோதை தற்கொலைக்கு முயன்றார். நேற்று காலையில் படுக்கையில் மயங்கினார். கல்லுாரி நிர்வாகத்தினர், திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நெல்லை மாவட்ட, தி.மு.க., செயலர் அப்துல்வகாப், நெல்லை கிழக்கு மாவட்ட செயலர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் சென்றனர். பூங்கோதை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால், யாரையும் சந்திக்கவில்லை. தனியார் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், வரும்போது சுயநினைவின்றி இருந்தவர், தற்போது உடல்நிலை தேறியுள்ளார் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காரணம் என்ன?
ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட, கடையம் ஒன்றிய ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், நேற்று முன்தினம் திருமலையப்பபுரத்தில் நடந்தது. தென்காசி மாவட்ட தி.மு.க., செயலர் சிவபத்மநாபன், ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்துக்கு, அரை மணி நேரம் தாமதமாக பூங்கோதை சென்றுள்ளார். அப்போது பேசிய கட்சி நிர்வாகி ஒருவர், 'எம்.எல்.ஏ., பூங்கோதை, கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. தேர்தல் வெற்றிக்கு பிறகு, தொகுதி பக்கம் வரவில்லை; பணியாற்றவில்லை' என குற்றம் சாட்டினார். வாக்குவாதம் ஏற்பட்டது. பூங்கோதைக்கு எதிராக கூச்சலிட்டனர்.
பூங்கோதையும் மேடைக்கு முன், தரையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். கூச்சல், குழப்பம் தொடர்ந்ததால், அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் காலில் விழுந்து, பூங்கோதை மன்னிப்பு கேட்டார். தன் நிலையை விளக்க, பூங்கோதை மேடை ஏறியபோது, மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து கையெடுத்து கும்பிட்டபடியே, 'போதும்டா சாமி...' எனக்கூறி, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் புகார் தெரிவிப்பதாக அங்கிருந்து காரில் புறப்பட்டார்.மேலும், தந்தை ஆலடி அருணா மறைவுக்கு பிறகு, குடும்பச் சொத்தை பிரிப்பதில், குடும்பத்தினருக்குள் தகராறு ஏற்பட்டது.
'சீட்' வாங்கும் முயற்சி
ஐன்ஸ்டீன் இன்ஜினியரிங் கல்லுாரி, அருணா கலைக்கல்லுாரிக்கு பூங்கோதையின் தம்பி எழில்வாணன் நிர்வாகியாக உள்ளார். இவருக்கும், பூங்கோதைக்கும் பேச்சு வார்த்தை இல்லை. நேற்று முன்தினம் நடந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், எழில்வாணன் நிர்வாகிகள்வரிசையில் அமர்ந்திருந்தார்; அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், பூங்கோதையை கட்சியினர் அவமானப்படுத்தினர்.வரும் தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில், தி.மு.க., 'சீட்' எழில்வாணனுக்கு போய்விடுமோ என்ற ஆதங்கமும், பூங்கோதையிடம் உள்ளது. இதனால், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகுமோ என்ற ஆதங்கத்தில் இருந்தவர், தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதுபற்றி, தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'இரண்டு முறை வெற்றி பெற்றும் பூங்கோதை எதுவும் செய்யவில்லை. கட்சிக்காரர்களை மதிக்கவில்லை. குடும்பத்தில் நிறைய சிக்கல்கள்.'இவற்றை மறைத்து, கட்சி நிர்வாகிகள் மீது பழி போட்டு, சீட் வாங்கும் முயற்சியில் பூங்கோதை மாத்திரைகள் உட்கொண்டுள்ளார். எத்தனை துாக்க மாத்திரைகளை உட்கொள்ளலாம் என, ஒரு டாக்டரான பூங்கோதைக்கு தெரியாதா' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE