சேலம்:''ஹிந்து கடவுள்களை அவமதிப்பதே தி.மு.க.வின் வேலையாக போய்விட்டது'' என பா.ஜ. மாநில தலைவர் முருகன் பேசினார்.
சேலத்தில் நேற்று வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முருகன் பேசியதாவது:நாமெல்லாம் கடும் விரதம் இருந்து பாதயாத்திரை செய்து வழிபாடு நடத்திய முருகனை கயவர் கூட்டம் கேவலமாக பேசியது. அதை யாரும் கண்டிக்கவில்லை. பா.ஜ. கண்டித்ததோடு அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவலியுறுத்தியே இந்த வேல் யாத்திரை நடத்தப்படுகிறது.

அந்த கருப்பர் கூட்டத்தை இயக்கியதே தி.மு.க.தான். ஹிந்து கடவுள்களை அவமதிப்பதே தி.மு.க. வின் வேலையாக போய்விட்டது. கருப்பர் கூட்டத்துக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும். டிச. 7ல் திருச்செந்துாரில் இந்த யாத்திரை நிறைவடையும்.வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.தான் அதிக இடங்களைக் கைப்பற்றப் போகிறது. நாம் கை காட்டுபவர்கள் தான் முதல்வர் பதவியில் அமர முடியும் என்ற நிலை வரப் போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீஸ் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் வேல் யாத்திரை நடத்த முயற்சித்த மாநில தலைவர் முருகன் உள்பட 762 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.