சென்னை; சென்னையில் குடும்பத்தினர் மூவரை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தலைமறைவாக சுற்றி வந்த, 'பாசக்கார' மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட மூவரை, டில்லி அருகே ஆக்ராவில், தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்த, தலித் சந்த், 74. இவரது மனைவி புஷ்பா பாய், 70, மகன், ஷீத்தல் குமார், 40, ஆகியோர், நவ., 11ல், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.விசாரணையில், ஷீத்தல் குமாருக்கும், மஹாராஷ்டிர மாநிலம், புனேவில் பெற்றோருடன் வசித்து வந்த, இவரது மனைவி, ஜெயமாலா என்பவருக்கும், கருத்து வேறுபாடு உள்ளது. கேமரா பதிவுஇவர்களது விவாகரத்து வழக்கு, புனே நீதிமன்றத்தில் உள்ளது தெரிய வந்தது.போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஜெயமாலா, இவரது சகோதரர்கள், கைலாஷ், விலாஷ் உள்ளிட்ட ஆறு பே ரின் உருவங்கள் பதிவாகி இருந்தன. இதையடுத்து, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, புனேவில் இருந்து, சோலாப்பூருக்கு காரில் தப்பிய கைலாஷ், 33, இவரது கூட்டாளிகள், கோல்கட்டாவைச் சேர்ந்த, ரவீந்திர நாத்கர்,25, விஜய் உத்தம் கமல், 28, ஆகியோரை, நவ., 13ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு, போலீசார் கைது செய்தனர்.மூவரையும், சென்னைக்கு அழைத்து வந்து, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்து, 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கின்றனர். இவர்களிடம், நேற்று முன்தினம் இரவு, தனித்தனியாக போலீசார் விசாரித்தனர்.அப்போது, கைலாஷ் வாக்குமூலம் அளித்ததாவது:சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஷீத்தல் குமார், உண்மையை மறைத்து, எங்களை ஏமாற்றி, அக்கா ஜெயமாலாவை திருமணம் செய்தார். அவரது வாழ்வை சீரழித்து விட்டனர். தலித் சந்த், எங்கள் அக்காவிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டார். இதனால், தன் இரு மகள்களுடன், ஜெயமாலா எங்களுடன் வந்துவிட்டார்.இதையடுத்து, தலித் சந்த் மற்றும் ஷீத்தல் குமாரிடம், ஜீவனாம்சமாக, 7 கோடி ரூபாய் கேட்டோம். இவர்கள், 1 பைசா கூட தர முடியாது எனக் கூறி விட்டனர். இதனால், மூவரையும் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினோம்.ராணுவ அதிகாரிஅதற்காக என் சகோதரர், விலாஷ் வழக்கறிஞர் என்பதால், இவர் வாயிலாக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மற்றும் விமானப்படை அதிகாரிகளிடம், இரண்டு துப்பாக்கிகளை வாங்கினோம். அதை பயன்படுத்தி, மூவரையும் சுட்டுக்கொன்றோம்.இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்தார்.இதற்கிடையே, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயமாலா, விலாஷ் மற்றும் ராஜிவ் ஷிண்டே ஆகியோர், புனேவில் தலைமறைவாக இருந்தனர். விலாஷ் துப்பாக்கியுடன் காரில் சுற்றி வந்தார். இவர்கள், தற்போது பயன்படுத்தி வந்த, மொபைல் போன் எண்களை போலீசார் சேகரித்தனர். அவற்றின், சிக்னலை ஆய்வு செய்தபோது, டில்லி அருகே உள்ள, ஆக்ராவை காட்டியது.இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர், மகேஷ்குமார் வாயிலாக, டில்லி போலீசாரின் உதவி கோரப்பட்டது. அம்மாநில போலீசார் உதவியுடன், ஆக்ராவில் இருந்த, ஜெயமாலா, 38. விலாஷ், 28, ராஜிவ் ஷிண்டே, 29, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.விலாஷிடம் இருந்து, துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள், சென்னை அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE