சென்னை: வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டத்தால் தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் வேல் யாத்திரையை பா.ஜ. மாநில தலைவர் முருகன் கடந்த 6ல் திருத்தணியில் துவங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். வழக்கமாக தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் செல்வாக்கு பெற்ற மாவட்டங்களை தவிர பிற இடங்களில் 100க்கும் குறைவானவர்களே கைதாவர்.
வேல் யாத்திரை விவகாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கைது எண்ணிக்கை 100ஐ தாண்டியது. குறிப்பாக கரூரில் 120 பேர் சேலத்தில் 400 பேர் நாமக்கல்லில் 200 பேர் என அனைத்து மாவட்டங்களிலும் சராசரி கைது 100ஐ தாண்டியது. கடந்த காலத்தில் பா.ஜ. பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் 500 பேர் வந்தாலே போலீசார் ஆச்சரியத்துடன் பார்ப்பர். ஆனால் வேல் யாத்திரை பொதுக்கூட்டங்கள் நடந்த கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ,சேலத்தில் சராசரியாக 100 பேர் முதல் 2000 பேர் வரை பங்கேற்று 500 பேர் முதல் 1000 பேர் வரை கைதாகினர்.

கூட்டம் கூடியதன் பின்னணி குறித்து உளவுதுறை மதம் சார்ந்த குற்றத்தடுப்பு நுண்ணறிவு கியூ பிரிவு மாநகர நுண்ணறிவு மாவட்ட எஸ்.பி.சி.ஐ.டி. ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆகியவற்றின் அறிக்கைகளை ஒருங்கிணைத்து உளவுத்துறை உயரதிகாரிகள் அரசின் பார்வைக்கு அளித்த அறிக்கை:
ஹிந்து அமைப்புகள் தொடங்கிய 20:20 எனும் திட்டத்தால் பா.ஜ.வின் வேல் யாத்திரைக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த கூட்டங்களில் பா.ஜ. நிர்வாகிகள் மட்டுமின்றி ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கோவில்களில் பூஜை நடத்துபவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தால் பா.ஜ.வில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் இதுவரை தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் சில மாவட்டங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் மட்டும் பா.ஜ. பிரதிநிதிகள் முகவர்களாக இருந்தனர். வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பா.ஜ. சார்பில் முகவர்கள் இடம்பெற நிர்வாகிகள் தயார் செய்து உள்ளனர். சட்டசபை தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ஜ. முக்கிய இடத்தை பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE