தலைவாசல்: கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அழிந்துபோன சிவன் கோவிலின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர் வீரராகவன், தலைவர் பொன்.வெங்கடேசன், தலைவாசல், ஆறகளூரில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த, 10ல் ஆய்வு செய்தனர். அப்போது, கமலமங்கை நாச்சியார் சன்னதியில், பாண்டியர், நாயக்கர் கால கண்டுவெட்டுகளை கண்டறிந்தனர்.
இதுகுறித்து, அந்த இருவரும் கூறியதாவது: கி.பி., 12ம் நூற்றாண்டில், மகதை மண்டல தலைநகராக ஆறகளூர் இருந்தது. இப்பகுதியை ஆட்சி செய்தவர் வாணகோவரையன். இவரது மனைவி புண்ணியவாட்டி நாச்சியார், கரிவரதராஜ பெருமாள் கோவில் கருவறை, அர்த்த மண்டபம், கோபுரம் அமைத்ததாக, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனை எதிரே, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கைலாசநாதர் தோப்பில், நந்தி சிலை மட்டும் உள்ளதால், அங்கு சிவன் கோவில் இருந்து, அழிந்துபோனதற்கான சான்று கிடைத்துள்ளது. இங்குள்ள ஆறு சிலைகள், 30 ஆண்டுக்கு முன் திருடுபோயுள்ளது. 17ம் நூற்றாண்டில் சிதைந்துபோன இக்கோவிலின் கற்களை பயன்படுத்தி, பெருமாள் கோவிலில், கமலமங்கை நாச்சியார் கோவில் கட்டப்பட்டுள்ளது. கி.பி., 1269ல், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின், 18வது ஆட்சியின்போது, இக்கல்வெட்டை வாணாதிதேவன் பொறித்துள்ளார். அதில், உடையார்வயிராவண ஈஸ்வர நாயனார் கோவில் திருப்பணி, பூஜைக்கு, தொழுவூர்(தொழுதூர்) ஏரி அருகே, 1,000 குழி நன்செய் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை, செக்கான் தடி எனும் அளவுகோலில் அளந்து, எல்லையில் சூல கற்கள் நிறுவி, நிலத்தின் வரி நீக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன சிவன் கோவில், 'ராவண ஈஸ்வர நாயனார்' என்ற பெயரில் இருந்துள்ளது. மேலும், சேலம் திருமலை நாயக்கரின் மகன் பெத்தநாயக்கன், 1618ல் பொறித்துள்ள, மற்றொரு கல்வெட்டில், தற்போதுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், 'கரியபெருமாள் கோவில்' என இருந்துள்ளது. மற்ற சன்னதிகளை கட்டிய பெத்தநாயக்கன், அவரது தந்தையின் உருவம், கோவில் தூண்களில் உள்ளன. அத்துடன், அரசு சின்னமான சூரியன், பிறை, நிலா நடுவில் குறுவாள் கொண்ட முத்திரை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE