நாமக்கல்: ''இந்தாண்டு, 11 மருத்துவ கல்லூரி கொண்டு வந்த, தமிழக முதல்வருக்கு பாராட்டுகள் ' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி பேசினார்.
பா.ஜ., சார்பில், வேல் யாத்திரை பொதுக்கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் துரைசாமி பேசியதாவது: எந்த திட்டம் போட்டாலும், ஸ்டாலின் குறை சொல்கிறார். ஹிந்து மக்கள் ஒன்றுபட வேண்டும். எழுச்சி பெறவேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாரதத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, வேல் யாத்திரை நடத்துகிறோம். இந்தாண்டு மட்டும், 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்த, முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டுக்கள். 7.5 சதவீத ஒதுக்கீடு செய்து, 410 கிராமப்புற மாணவர்கள் டாக்டராவதற்கு, முதல்வர் பழனிசாமி சட்டத்தை கொண்டு வந்ததற்காகவும், பா.ஜ., கூட்டணியில் இருப்பதற்காகவும், பா.ஜ., ஆலோசனை பேரில் இதை செய்கிறார் என்பதற்காகவும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மாநில துணைத்தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை பேசியதாவது: அதர்மத்தை எதிர்த்து, செய்யக்கூடியது வேல் யாத்திரை. தி.மு.க., கயவர்களை, தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, நான்கு எம்.எல்.ஏ.,க்களை, சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஷ்யாம்சுந்தர், வக்கீல் அணி நிர்வாகிகள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஊர்வலமாக செல்ல முயன்ற, பா.ஜ., நிர்வாகிகளை, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE