நாமக்கல்: தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்த, முகமூடி அணிந்த மர்ம நபர், அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி, 40 பவுன் நகையை பறித்து சென்றார்.
நாமக்கல், முல்லை நகரில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன், 60. இவர், கோழிப்பண்ணை வைத்துள்ளார். மேலும், குளோபல் எண்டர் பிரைசஸ் என்ற பெயரில், கோழி மருந்து விற்பனை செய்து வருகிறார். இவர் மனைவி கீதா, 52. தம்பதியர் இருவரும், நேற்று முன்தினம் இரவு வீட்டில், தனித்தனி அறையில் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு வீட்டின் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து, முகமூடி அணிந்த நபர் உள்ளே புகுந்துள்ளார். அப்போது, கீதா படுத்திருந்த அறைக்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கேட்டுள்ளார். பயந்துபோன அவர், கழுத்து, கையில் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்து நகைகள் என, மொத்தம், 40 பவுன் நகைகளை மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். அவற்றை பறித்துக் கொண்ட மர்ம நபர், அங்கிருந்து தப்பி தலைமறைவானார். சம்பவம் குறித்து, அவர் தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று, நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர், கைரேகைகளை பதிவு செய்தார். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE