புதுடில்லி :கட்சி தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்த, கபில் சிபல் கருத்துக்கு ஆதரவாக பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உட்பட, நான்கு மூத்த காங்., தலைவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில், அவர்களை சிறப்பு குழுவில் சேர்த்து, சோனியா உத்தரவிட்டு
உள்ளார்.காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ராகுல், 2019 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
பரிசோதனை
இதையடுத்து, காங்., இடைக்கால தலைவராக, சோனியா பொறுப்பேற்றார். கட்சிக்கு நிலையான தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டது.இதனால் அதிருப்தி அடைந்த, காங்., மூத்த தலைவர்கள், 23 பேர், கடந்த ஆகஸ்டில், கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர்.அதில், 'கட்சியில் அதிரடியான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும், முழுநேர நிலையான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்' என தெரிவித்து, தலைமை மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.இந்நிலையில், செப்டம்பரில், மருத்துவ பரிசோதனைக்காக, சோனியா அமெரிக்கா சென்றார். அதற்கு முன், அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, மூன்று கமிட்டிகளை உருவாக்கினார்.
தேசிய பாதுகாப்பு, வெளியுறவு விவகாரம் மற்றும் பொருளாதாரம் குறித்து, சோனியாவுக்கு சரியான தகவல்களை தெரிவிக்க, இந்த கமிட்டி உருவாக்கப்பட்டன.இதில், பல மூத்த தலைவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூன்று கமிட்டியிலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், 'சுய பரிசோதனை செய்து கொள்ளும் வாய்ப்பை காங்., இழந்துவிட்டது' என, மூத்த தலைவர் கபில் சிபல் சமீபத்தில் தெரிவித்தார்; இது, கட்சிக்குள் புகைச்சலை அதிகரித்தது.சில மூத்த தலைவர்களும் கபில் சிபலின் கருத்தை ஆமோதித்தனர்; இது தலைமையை கவலை அடையச் செய்தது.
சமாதானம்
இதையடுத்து, அதிருப்தியில் உள்ள சில மூத்த தலைவர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில், காங்., தலைமை இறங்கியுள்ளது. கபில் சிபலின் கருத்துக்கு ஆதரவாக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், காங்.,கின் பொருளாதார சிறப்பு கமிட்டியில் உறுப்பினராக, சிதம்பரம் நேற்று அறிவிக்கப்பட்டார்.கடந்த ஆகஸ்டில் தலைமைக்கு கடிதம் எழுதிய, 23 மூத்த தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்த, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆனந்த் சர்மா, சசி தரூர் ஆகியோர், வெளியுறவுத்துறை கமிட்டியிலும், மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தேசிய பாதுகாப்பு கமிட்டியிலும் உறுப்பினர்களாக, நேற்று அறிவிக்கப்பட்டனர்.
கோவாவில் சோனியா
காங்., தலைவர் சோனியாவுக்கு, ஆஸ்துமா பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக, அவர் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாயின. டில்லியில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. மேலும், காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, சோனியாவை சிறிது காலம், சென்னை அல்லது கோவாவில் சென்று தங்கும்படி, டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, மகன் ராகுலுடன், நேற்று அவர் கோவா புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE