திருச்சி :திருச்சி வந்த, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, கயிலாசநாதர் கோவில் சார்பில் கொடுத்த பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்து விட்டார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, நேற்று திருச்சி வந்தார். அவருக்கு, கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்க, கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி, உதயநிதி வந்த போது, கோவில் சிவாச்சாரியார்கள் பூரண கும்பம் மற்றும் பரிவட்டத்துடன் காத்திருந்தனர். ஆனால், உதயநிதி பரிவட்டம் கட்ட மறுப்பு தெரிவித்ததோடு, சிவாச்சாரியார்கள், தன் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் வைக்கவும் அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
உதயநிதி, நேற்று மதியம், திருவாரூர் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார். 10க்கும் மேற்பட்ட கார்களில், தி.மு.க.,வினர் பின் தொடர்ந்து சென்றனர்.
திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார், உதயநிதி காருக்கு பின்னால் சென்ற கார்களை தடுத்து நிறுத்தினர்.இதனால், தி.மு.க., வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், போலீசார் அனுமதிக்காததால், 10 நிமிடங்களுக்கு பின் புறப்பட்ட தி.மு.க., வினர், உதயநிதி காரை பின்தொடர முயன்றனர்.ஆனால், தஞ்சை மாவட்ட எல்லையான புதுக்குடியில், பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும், பேரணி போல் சென்ற தி.மு.க.,வினரின் கார்களை அனுமதிக்கவில்லை.உதயநிதி கார் சென்று, 15 நிமிடங்களுக்கு பிறகே, தி.மு.க.,வினரின் கார்களை போலீசார் விடுவித்தனர்.
திருக்குவளை பிரசார கூட்டத்தில் கைது
'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில், நாகை மாவட்டம், திருக்குவளையில் இருந்து, நேற்று முதல் பிரசாரம் துவங்க, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி திட்டமிட்டிருந்தார். பிரசாரம், வரும் மே மாதம் வரை, 100 நாட்கள் நடத்த திட்டமிடப் பட்டிருந்தது.
நேற்று மாலை திருக்குவளையில், பிரசாரம் துவங்க இருந்தது. தஞ்சை டி.ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா தலைமையில், 10 டி.எஸ்.பி,க்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் என, 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.நேற்று மாலை அங்கு வந்த உதயநிதி, கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினார்.
பிரசாரத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், அவரை கைது செய்வதாக கூறினர். தொண்டர்கள் கூச்சலிட்டு, உதயநிதியை கைது செய்ய விடாமல் தடுக்க முயற்சி செய்தனர். இதனால், போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இருப்பினும், உதயநிதி மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சில மணி நேரத்துக்கு பின், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இதற்கிடையில், உதயநிதி கைதை கண்டித்து, தமிழகத்தின் பல பகுதிகளில், தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர்.