சென்னை : மாநிலங்களில் பா.ஜ. வெற்றிக்கு வியூகங்கள் வகுத்து செயல்படுத்துவதில் வல்லவரான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வந்தார்.
சட்டசபை தேர்தல் பணிகளுக்கும் கூட்டணி பேச்சுக்கும் அவர் பிள்ளையார் சுழி போடுகிறார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பாதை உட்பட 67 ஆயிரத்து 378 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும் அரசு விழாவில் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை மக்களின் நீண்ட நாள் திட்டமான தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பதுடன் தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்த உள்ளார்.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. அதற்கான திருத்தப் பணி மாவட்டங்களில் முழுவீச்சில் நடந்து வருகிறது.அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளன. ஒவ்வொரு கட்சியும் எந்த கூட்டணியில் இடம் பெறலாம்; எத்தனை தொகுதிகள் பெறலாம் என கணக்கிட்டு அதற்கான ரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளன.லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ. - பா.ம.க. -- தே.மு.தி.க. போன்ற கட்சிகள் இருந்தன; தற்போது வரை கூட்டணியில் நீடிக்கின்றன. வரும் சட்டசபை தேர்தலில் இக்கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றன.
அ.தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கவும் அதிக இடங்களில் போட்டியிடவும் விரும்புகிறது.தற்போது தமிழக சட்டசபையில் பா.ஜ.வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. அதனால் வரும் சட்டசபை தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் வெற்றி பெற்று சபைக்கு செல்ல வேண்டும் என்பதில் பா.ஜ. தலைமை உறுதியாக உள்ளது.அக்கட்சி கூட்டங்களில் இதை வலியுறுத்தி மாநில தலைவரும் மற்ற நிர்வாகிகளும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து வியூகம் வகுக்கவும் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமையுடன் பேசி முக்கிய முடிவு எடுக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வந்தார். .இ
இவ்விழாவில் 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் உட்பட மொத்தம் 67 ஆயிரத்து 378 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.மேலும் 400 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை புதிய நீர்தேக்க திட்டத்தையும் சென்னை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம் இது. மாலை ஓட்டல் லீலா பேலசில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பா.ஜ. நிர்வாகிகளுடன் தனி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பின் பா.ஜ. உயர்மட்ட குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.அரசு விழாவிற்கு செல்வதற்கு முன்னரோ அல்லது விழா முடிந்த பின்னரோ முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அமித்ஷாவை சந்திக்கின்றனர். அப்போது கூட்டணி குறித்தும் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்தும் பேச்சு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பா.ஜ. நிர்வாகிகள் கூறுகையில் 'அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் எத்தனை தொகுதிகள் என்பது இன்று அமித்ஷா நடத்தும் பேச்சில் முடிவாக வாய்ப்புள்ளது. மேலும் தேர்தலுக்கு ஆயத்தமாக பா.ஜ. சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அமித்ஷா வியூகங்களை வகுத்து தர உள்ளார்' என்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முக்கிய பிரமுகர்கள் சிலர் சந்திக்க உள்ளனர். நடிகர் ரஜினியும் அமித்ஷாவை சந்தித்து பேசும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE