மதுரை: அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஏழை மாணவர்களை தத்தெடுத்து, அவர்களின் மருத்துவப் படிப்பு கல்விக் கட்டணத்தை ஏற்க முன்வர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.
திருநெல்வேலி வடக்கன்குளம் கிரகாம்பெல் தாக்கல் செய்த பொதுநல மனு:தொழில் படிப்பு சுயநிதி கல்லுாரிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் நிர்ணயித்துள்ளது. இத்தொகையை தற்போதைய பொருளாதார நெருக்கடியால் செலுத்த இயலாது.
மக்களிடம் கருத்துக் கேட்கவும், இயற்கை நீதியை பின்பற்றவும் குழு தவறிவிட்டது. குழு நிர்ணயித்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பு காலகட்டத்தை உணர்ந்து குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கிரகாம்பெல் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை உயர்ந்த நோக்கில் அரசு வழங்கியுள்ளது. பல தடைகளுக்குப் பின் மருத்துவக் கல்லுாரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது. அவர்களால் கட்டணம் செலுத்த இயலாததால், படிப்பை பாதியில் கைவிடுவது வேதனையைத் தருகிறது.
'தினமலர்' நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் ஒரு ஏழை மாணவரின் மருத்துவப் படிப்பிற்கு கட்டணம் செலுத்த மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன் முன்வந்துள்ளார். இதுபோல் பிற வழக்கறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் ஏழை மாணவர்களை தத்தெடுத்து, அவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என கருத்து வெளியிட்டனர்.
பின் நீதிபதிகள், 'ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லுாரிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் படிப்பை பாதியில் கை விடுகின்றனர். இதைத் தவிர்க்க அவர்களுக்கு கட்டணம் செலுத்த மாற்று ஏற்பாடு செய்யும் திட்டம் உள்ளதா, அவர்கள் படிப்பை முடித்ததும் கிராமப்புறங்களில் பணிபுரிவதாக உத்தரவாதம் பெற்றால் என்ன என்பதற்கு அரசுத் தரப்பில் விபரம் பெற்று தெரிவிக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது,' என உத்தரவிட்டு, நவ.,27 க்கு ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE