தமிழ்நாடு

குப்பைக்கும் வரி! ராம்நகர் பகுதியில் மாநகராட்சி 'கெடுபிடி'குப்பை சேகரிக்காததால் மக்கள் அதிருப்தி

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை;கோவை, ராம்நகர் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போரிடம் மட்டும் குப்பை சேகரிக்க, ஒரு மாதத்துக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது, மாநகராட்சி நிர்வாகம். கட்டணம் செலுத்தாதவர்களிடம், கடந்த மூன்று நாட்களாக, குப்பை வாங்காததால், சர்ச்சை எழுந்துள்ளது; மக்கள் மத்தியில், அதிருப்தி நிலவுகிறது.கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ளன; 6,695 வீதிகள் இருக்கின்றன.
குப்பைக்கும் வரி! ராம்நகர் பகுதியில் மாநகராட்சி 'கெடுபிடி'குப்பை சேகரிக்காததால் மக்கள் அதிருப்தி

கோவை;கோவை, ராம்நகர் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போரிடம் மட்டும் குப்பை சேகரிக்க, ஒரு மாதத்துக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது, மாநகராட்சி நிர்வாகம். கட்டணம் செலுத்தாதவர்களிடம், கடந்த மூன்று நாட்களாக, குப்பை வாங்காததால், சர்ச்சை எழுந்துள்ளது; மக்கள் மத்தியில், அதிருப்தி நிலவுகிறது.
கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ளன; 6,695 வீதிகள் இருக்கின்றன. நாளொன்றுக்கு, 850 டன் முதல், 900 டன் வரை, குப்பை சேகரமாவதாக, 'கணக்கு' காட்டப்படுகிறது. இவற்றை ஓரிடத்தில் மலை குன்று போல் குவிக்காமல், மக்கும் குப்பையில் உரம் தயாரிக்க வேண்டும்; மக்காதவற்றை மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குப்பைக்கு கட்டணமா!திடக்கழிவு மேலாண்மை விதிகளில் குறிப்பிட்டுள்ள படி, சில ஆண்டுகளுக்கு முன், குப்பை கட்டணம் வசூலிக்க, மாநகராட்சி முயற்சித்தபோது, எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்தப் பட்டது. தற்போது, எவ்வித அறிவிப்பும் செய்யாமல், திடீரென, மத்திய மண்டலம், 54வது வார்டு, ராம் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடம், மாதந்தோறும், 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்; இல்லையெனில், குப்பை சேகரிக்க மாட்டோம் என, சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர், வீடு வீடாகச் சென்று வலியுறுத்தி உள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக, குப்பை சேகரிப்பதை நிறுத்தி விட்டார். இது, ராம்நகர் பகுதி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்தும், குப்பை சேகரிக்காத காரணத்தினாலும், சில குடியிருப்புகளில் வசிப்போர், குப்பைக்கு வரி செலுத்தியுள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:திடக்கழிவு மேலாண்மை விதிகளில், 100 கிலோவுக்கு மேல் குப்பை உருவாக்குவோர், அவர்களே அழித்துக் கொள்ள வேண்டுமென, கூறப்பட்டுள்ளது. நான்கு, எட்டு, 16 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், 100 கிலோ குப்பை உருவாக வாய்ப்பில்லை.
நாங்கள், மத்திய - மாநில அரசுகளின் விதிமுறைக்கு உட்பட்டு, குப்பையை தரம் பிரித்துக் கொடுக்க தயாராக இருக்கிறோம். மாதந்தோறும், 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, நிர்ப்பந்திப்பது ஏன்?இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லையே. மற்ற பகுதிகளில் வசூலிக்காமல், ராம்நகரில் வசிப்போருக்கு மட்டும் நெருக்கடி கொடுப்பது எதற்காக?இவ்வாறு, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அனுமதி கொடுத்தது யார்?
மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் கூறுகையில், 'நுாறு கிலோவுக்கு மேல் குப்பை உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில், இரு தனியார் நிறுவனங்கள், தரம் பிரித்து சேகரிக்கின்றன. மாதந்தோறும் கட்டணம் வசூலித்து, குப்பை சேகரித்து, அழித்துக் கொள்ள வேண்டியது, அந்நிறுவனங்களின் பொறுப்பு.அக்குடியிருப்புகளில், மாநகராட்சி குப்பை சேகரிக்காது; கிடங்கிற்கும் செல்லாது. நுாறு கிலோவுக்கு கீழ் குப்பை உருவாக்குவோர், தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும். 'குப்பை கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ராம் நகரில் மட்டும் வசூலிக்க, யார் அனுமதி கொடுத்தது என தெரியவில்லை' என்றனர்.
மாதந்தோறும் குப்பை வரி செலுத்த வேண்டுமென, மாநகராட்சி சார்பில், எவ்வித பொது அறிவிப்பும் வெளியிடவில்லை; சுற்றறிக்கையும் அனுப்பவில்லை. ஒரு சட்டத்தை, மாநகர பகுதி முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட ஒரு ஏரியாவில் மட்டும் நடைமுறைப்படுத்துவது தவறு.-ரவீந்திரன் செயலாளர், கோயமுத்துார் குடியிருப்போர் நலச்சங்கம்.
கட்டணம் எவ்வளவு?
ரூ.500க்கு கீழ் சொத்து வரி செலுத்துவோர், ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரூ.10, ரூ.501-1,000 வரை ரூ.20, ரூ.1,001-2000 வரை ரூ.30, ரூ.2,001-5000 வரை ரூ.50, அடுக்குமாடி குடியிருப்பு/ கேட்டட் கம்யூனிட்டியில் வசிப்பவர்கள், ஒரு குடியிருப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.50 செலுத்த வேண்டுமென, கோவை மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையும் மீறி, ராம்நகரில், ஒரு வீட்டுக்கு, மாதந்தோறும் ரூ.100 கட்டணம் வலுக்கட்டாயமாக, மக்களை மிரட்டி, வசூலிக்கப்படுகிறது. இது, சர்ச்சையை கிளப்பியிருப்பதோடு, குப்பை சேகரிப்பதை நிறுத்தி வைத்திருப்பதால், அதிருப்தி நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raajaa -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-202012:33:11 IST Report Abuse
raajaa நாங்களும் தான் மாதம் 20 ரூபாய் கட்டுகிறோம்... எங்கள் அடுக்குமாடியில் 14 குடும்பங்கள் உள்ளன மாதம்தோறும் 280 ரூபாய் கட்டுகிறோம்.. 500 ரூபாய்க்கு பிட்சா வரவழைத்து சாப்பிடுகிறார்கள் 100 ரூபாய் கொடுப்பதற்கு வலிக்கிறதா? குப்பை காரன் வராவிட்டால் சுமந்துகொண்டு வேறு எங்கேயாவது கொண்டு ஓடுவது கடினமாக தோன்றுகிறதே பரவாயில்லையா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X