கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் புது முயற்சியாகவாக்காளர் அழைப்பிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார். மாவட்டம் தோறும் ஓட்டுச் சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்தது.அடுத்தக் கட்டமாக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களின் பெயர்களை சேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அழைப்பிதழ்மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் சந்திரசேகர சகாமுரி உத்தரவின் பேரில் கடலுார் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, வீடு வீடாக சென்று திருமண அழைப்பிதழ் வடிவில் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டது.வாக்காளர் அழைப்பிதழில் '1.1.2021ஐ தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணி கடந்த 16ம் தேதி துவங்கி வரும் டிச., 15ம் தேதி வரை நடக்கிறது.
இதில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான பணிகள் நடக்கிறது.வாக்காளர்கள் வசதிக்காக அவர்களின் குடியிருப்பு அருகில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி விவரங்கள்' குறிப்பிடப்பட்டுள்ளது.தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான பணிகள் நடக்கிறது.
18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் 80 ஆயிரம் பேர் மாவட்டத்தில் உள்ளனர். இவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்னுரிமை அளிக்க, அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழ் வடி வில் வாக்காளர் அழைப்பிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.வாக்காளர் அழைப்பிதழ் வழங்கல்கடலுார் வருவாய் கோட்டம் சார்பில் கடலுார் புதுப்பாளையத்தில் வாக்காளர் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தாசில்தார் பலராமன் தலைமை தாங்கி, புதிய வாக்காளர்களுக்கு தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ வைத்து வாக்காளர் அழைப்பிதழ் வழங்கினார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெற்றிச்செல்வன், இளநிலை வருவாய் உதவியாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE