கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சில தினங்களாக பெய்த மழையில் கோமுகி அணை மற்றும் 26 ஏரிகளுக்கு மீண்டும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில், நெல், கரும்பு, மக்காச்சோளம் உட்பட பல்வேறு வகையான பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட கோமுகி, மணிமுக்தா அணைகள், மூன்று ஆறுகள், 211 ஏரிகள் உள்ளன. இரு அணைகள் மற்றும் ஏரி பாசனத்தை நம்பி 18 ஆயிரம் ெஹக்டர் விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த மாதம் பெய்த பலத்த மழையில், வறண்ட நிலையில் இருந்த அணைகள், ஏரிகளில் நீர் பிடிப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக மீண்டும் நீர் வரத்து ஏற்பட்டு நிரம்பி வருகிறது.கல்வராயன்மலையில் பெய்த மழை முழுவதும் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு வந்து சேர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 46 அடியில் 44 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, வரத்து நீரான 300 கன அடியும் ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளளவு 36 அடி ஆகும். சங்கராபுரம் பகுதியில் கல்வராயன்மலையில் உருவாகும் மணி, முக்தா ஆகிய இரு நதிகள் மூலம் அணைக்கு நீர் வருகிறது. அணைக்கு நீர் வரத்து இன்றி, சுற்று வட்டார பகுதியில் பெய்த மழைநீர் மட்டுமே தேங்கி நின்றது. தற்போது பெய்த மழையால் அணைக்கு 144 கன அடி வரத்து நீராக உள்ளது. அணையில் 23.50 அடி தண்ணீர் தேங்கியுள்ளது.கோமுகி ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது, ஏர்வாய்பட்டினம், சோமண்டார்குடி, மோ.வன்னஞ்சூர், கருணாபுரம், பொரசக்குறிச்சி, விருகாவூர், சித்தலுார் உட்பட 11 தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தோடுகிறது. தடுப்பணையிலிருந்து செல்லும் கால்வாய் மூலம் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டது.
இதில், தற்போது 26 ஏரிகள் முழுமையாக நிரம்பி கோடி வழியாக தண்ணீர் வழிந்தோடுகிறது. மேலும், மூன்று ஏரிகள் 90 சதவீதமும், 23 ஏரிகள் 50 சதவீதமும் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல், 159 ஏரிகள் 25 சதவீதம் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் அணைகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE