காபூல்: பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் தலைவரான அய்மான் அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில் இயற்கை காரணங்களால் மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எகிப்திய நாட்டை சேர்ந்த அய்மான் அல்-ஜவாஹிரி, ஒசாமா பின்லேடனுடன் இணைந்து 1988ம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவரில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை நிறுவினார். இந்த பயங்கரவாத அமைப்பு, அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்.,11ல் நடத்திய ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல்களால், அல்கொய்தா தலைவர் பின்லேடனை கொல்வதில் அமெரிக்கா தீவிரமானது. இதன்விளைவாக பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடன், அமெரிக்காவால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பிறகு, அல்கொய்தாவின் முழு கட்டுப்பாடும் அய்மான் அல்-ஜவாஹிரி வசம் வந்தது. தலைமை பொறுப்பையும் அவர் ஏற்றார்.

இதனையடுத்து ஜவாஹிரியின் தலைக்கு 25 மில்லியன் டாலர்களை விலையாக வைத்தது அமெரிக்கா. இந்நிலையில் கடந்தாண்டு அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. மேலும், கடந்த வாரம் நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்தியில், அல்கொய்தாவின் தளபதிகள் இருவர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஜவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி மரணமடைந்துவிட்டதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஜவாஹிரியின் மரணம் குறித்து அல்கொய்தா தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE