புதுடில்லி: சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் 72 அனுமதியின்றி முதலீட்டாளர்களிடம் திரட்டிய தொகையுடன் வட்டியையும் சேர்த்து 62 ஆயிரத்து 600 கோடி ரூபாயை செலுத்த உத்தரவிடக் கோரி பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
சுப்ரதா ராயின் 'சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன்' ஆகிய இரு நிறுவனங்கள் 'செபி' யின் அனுமதியின்றி 2010ல் கடன் பத்திரங்களை வெளியிட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் திரட்டின.இதையடுத்து செபி தொடர்ந்த வழக்கில் 'சுப்ரதா ராய் செபிக்கு 25 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என 2012ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தொகையை செலுத்தாததால் சுப்ரதா ராய் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையின் கீழ் 2014ல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து அவர் சஹாரா குழுமத்திற்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்து பணத்தை திரும்பத் தரும் நடவடிக்கையை மேற்கொண்டார்.அவரால் குறிப்பிட்ட அளவிற்கே பணத்தை திரும்பத் தர முடிந்தது. தனக்கு 'பரோல்' அளித்தால் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை விற்று பணம் தந்து விடுவதாக தெரிவித்தார்.இதை உச்ச நீதிமன்றம் ஏற்றது. இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் 2016ல் பரோலில் வெளியே வந்தார்.
நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும் சுப்ரதா ராய் எஞ்சிய தொகையை தராமல் இழுத்தடித்ததால் செபி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:சுப்ரதா ராய் மற்றும் அவரது இரு நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தை திரும்பத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் முதலீட்டாளர்களுக்கு தர வேண்டிய தொகை வட்டியுடன் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.சுப்ரதா ராயும் அவரது நிறுவனங்களும் முதலீட்டாளர்களிடம் வசூலித்த தொகையை ஆண்டுக்கு 15 சதவீத வட்டியுடன் திரும்ப அளிக்க வேண்டும்.அதன்படி அசல் மற்றும் எட்டு ஆண்டுகளுக்கான வட்டி ஆகியவை சேர்த்து 62 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.இத்தொகையை சுப்ரதா ராய் செலுத்தத் தவறினால் அவரது பரோலை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சஹாரா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செபிக்கு தர வேண்டிய தொகையில் ஏற்கனவே 15 ஆயிரம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. அதை கணக்கில் எடுக்காமல் எட்டு ஆண்டுகளுக்கு வட்டியுடன் பணத்தை தர வேண்டும் என செபி கூறுவது தவறு.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.செபி தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றமும், இறக்கமும்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை சஹாரா குழுமம் ரியல் எஸ்டேட் முதல் விமான சேவை வரை கால் பதிக்காத துறையே இல்லை. இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை 'ஸ்பான்சர்' ஆகவும் இருந்தது. மூன்று கோடி முதலீட்டாளர்களிடம் அனுமதியின்றி நிதி திரட்டிய வழக்கில் சிக்கிய பின் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.சமீபத்தில் 'நெட் பிளிக்ஸ்' நிறுவனத்தின் 'பேட் பாய் பில்லியனர்ஸ்' என்ற தொடரை வெளியிட சுப்ரதா ராய் தடை கோரியதை அடுத்து அவர் பெயர் ஊடகங்களில் மீண்டும் அடிபட்டது.சுப்ரதா ராய் போன்ற பெருந் தொழிலதிபர்களின் ஏற்ற இறக்க வாழ்க்கையை அடிப்படையாக வைத்து டுக்கப்பட்ட இந்த படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE