சென்னை: தமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவும், அரசு திட்டங்களை துவக்கி வைக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். விமான நிலையத்தில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து தனியார் ஓட்டலில் தங்கியுள்ள அவர், தமிழகத்தில் இருப்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. அதற்கான திருத்தப் பணி மாவட்டங்களில் முழுவீச்சில் நடந்து வருகிறது.அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளன.

வரும் சட்டசபை தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் வெற்றி பெற்று சபைக்கு செல்ல வேண்டும் என்பதில் பா.ஜ. தலைமை உறுதியாக உள்ளது.அக்கட்சி கூட்டங்களில் இதை வலியுறுத்தி மாநில தலைவரும் மற்ற நிர்வாகிகளும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து வியூகம் வகுக்கவும் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமையுடன் பேசி முக்கிய முடிவு எடுக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(நவ.,21) சென்னை வந்தார்.

வரவேற்பு
விமான நிலையத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழக பா.ஜ., தலைவர் முருகன், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி, எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து, அமித்ஷா தங்கும் ஓட்டல் வரை சாலையின் இரு புறமும் கூடியுள்ள கட்சி தொண்டர்கள், ஆடல், பாடலுடன், வரவேற்றனர்.
நடந்து சென்றார்
விமான நிலையத்தின் வெளியே காரில் இருந்து இறங்கிய அமித்ஷா, சாலையில் நடந்து சென்றபடி, தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்டார். அப்போது அவர், தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்தும், கையசைத்தபடி நடந்து சென்றார்.

மகிழ்ச்சி
தமிழக பயணம் குறித்து அமித்ஷா டுவிட்டரில், தமிழில் வெளியிட்ட பதிவு:
சென்னை வந்தடைந்தேன்!
தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்! pic.twitter.com/SIyGePTc9W
— Amit Shah (@AmitShah) November 21, 2020
அமித்ஷா வருகையை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE