சென்னை: இந்தியாவில் வாரிசு அரசியலை பா.ஜ., படிப்படியாக ஒழித்துள்ளது. தமிழகத்திலும் ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல்
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அவரை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை புதிய நீர்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்த அமித்ஷா, பின்னர் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
* ரூ.61,483 கோடியில், சென்னை மெட்ரோ ரயிலின் 2வது திட்டத்திற்கு அடிக்கல்
* கோவை அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்டபால திட்டத்திற்கு அடிக்கல்
* கரூர் நஞ்சைபுகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தை துவங்கி வைத்தார்.
* சென்னை வர்த்தக மையத்தை ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல்
* ஐஓசி.,யின் 3 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ் தொன்மையானது
இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: உலகின் தொன்மையான தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் அளிக்கிறது. இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். தமிழக கலாசாரம் பாரம்பரியம் மிகவும் தொன்மையானது.
தமிழகம் முன்னிலை
கொரோனாவை எதிர்த்து அரசு மட்டுமல்ல, 130 கோடி மக்களும் போராடுகின்றனர். கொரோனாவுக்கு எதிராக 130 கோடி மக்களும் அரசுடன் இணைந்து போராடுகின்றனர். கொரோனாவுக்கு எதிராக முதல்வர், துணை முதல்வர் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்துகின்றனர்.தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் அறிவியல் பூர்வமாக துல்லியமான தரவுகளுடன் பேசுகின்றனர். கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம், நாட்டிலேயே தமிழகத்தில் அதிகம். தமிழகம் போன்று வேறு எங்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை . கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுகிறது. இந்த வைரசை கையாள்வதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
நல்லாட்சி
நிர்வாக திறனிலும் தமிழகம் இந்தஆண்டு முதலிடம்.மாநிலங்களுக்கு இடையிலான நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
சுத்தமான குடிநீருக்கு இலக்கு
அனைவருக்கும் வீடு என்ற திட்டம் 2022ம் ஆண்டிற்குள் நிறைவேறும்.விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் பல கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.95 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,400 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.விவசாய சீர்திருத்த திட்டங்களை தமிழக அரசு செய்துள்ளது.2024ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் பாதுகாப்பு உற்பத்தி தளவாட வளாகத்தை மோடி அரசு தான் அமைத்தது.பாறை போன்ற இந்த ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை வைத்தது மோடி அரசு தான்

தி.மு.க.,விற்கு சவால்
மத்திய அரசை குறைகூறும் தி.மு.க., 10 ஆண்டுள் மத்திய ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள். மத்திய அரசு அநீதி இழைத்ததாக கூறுகிறார்கள். 10 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தை திமுக, என்ன செய்தீர்கள் என பட்டியலிடுங்கள். மன்மாகன் அரசு, தமிழகத்திற்கு 16,155 கோடி ஒதுக்கீடு செய்தது.மோடி ஆட்சி ரூ.32, 850 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்திற்கு நாங்கள் செய்தவற்றை பட்டியலிட தயார். திமுக விவாதிக்க தயாரா?.தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி, ஏழைகள் நலன் என மோடி அரசு, பழனிசாமி அரசு உங்களுடன் தமிழ் நாட்டு மக்களுடன் துணை நிற்கும்.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
வாரிசு அரசியலை பா.ஜ., படிப்படியாக ஒழித்து வந்துள்ளது. தமிழகத்திலும் அதை ஒழிப்போம்.ஊழலை பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை உள்ளது.2ஜி உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்த திமுகவுக்கு ஊழல் பற்றி பேச என்ன அருகதை உள்ளது. குடும் அரசியல் நடத்திவரும் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள். தமிழகத்திலும், குடும்ப அரசியலுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE