சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

பங்காளியாய் மாறணும் காங்கிரஸ்!

Added : நவ 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பங்காளியாய் மாறணும் காங்கிரஸ்!வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:-கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் அபார வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற, காங்., - எம்.பி.,க்கள் எட்டு பேரும், தங்கள் தொகுதிக்கு உட்பட்ட, 45க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில், பம்பரமாக சுழன்று, மக்கள் பணி மற்றும் கட்சி பணி ஆற்றியிருக்க


பங்காளியாய் மாறணும் காங்கிரஸ்!வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:-கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் அபார வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற, காங்., - எம்.பி.,க்கள் எட்டு பேரும், தங்கள் தொகுதிக்கு உட்பட்ட, 45க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில், பம்பரமாக சுழன்று, மக்கள் பணி மற்றும் கட்சி பணி ஆற்றியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், வரும் சட்டசபை தேர்தலில், காங்., போட்டியிட விரும்பும் தொகுதிகள் எண்ணிக்கை பற்றி, தயங்கி நின்று, தி.மு.க.,விடம் கோரிக்கையை முன்வைக்க வேண்டிய, நிலை ஏற்பட்டிருக்காது.பீஹார் சட்டசபை தேர்தலில், 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 17 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. இதை காரணமாக காட்டி, தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு, 20 இடங்கள் மட்டுமே, தி.மு.க., ஒதுக்கும் என, செய்தி பரவி வருகிறது.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், 'தேர்தலை, நடைமுறை கோணத்தில் நாங்கள் பார்க்கிறோம். தொகுதிவாரியாக உள்ள, யதார்த்த நிலையை கவனிக்கிறோம். மற்ற விஷயங்களை விட, கூட்டணியின் வெற்றி தான் முக்கியம்.'பீஹாரின் நிலை வேறு; தமிழகத்தின் அரசியல் நிலவரம் வேறு. எதார்த்த அணுகுமுறையின்படி, தொகுதிப்பங்கீடு நடக்கும். அனாவசிய பேரம் இருக்காது' என, தெரிவித்துள்ளார்.உண்மையை, வெளிப்படையாக பேசியுள்ளார். தேர்தல் பணியில், காங்கிரஸ் மெத்தனமாக இருந்தாலும், தி.மு.க., வெற்றி பெற, அக்கட்சியின் ஆதரவு அவசியம்.தேர்தல் காலத்தில் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும், கட்சிப் பணியில் ஈடுபட்டால், காங்கிரஸ் வளர்ச்சி அடைந்திருக்கும். தேர்தல் நேரத்தில், தேவையான தொகுதிகளை கேட்க, தயக்கம் காட்ட வேண்டியதில்லை. ஆனால் காங்கிரசார், கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபடுவதே இல்லையே!காங்கிரஸ் வளர்ந்திருந்தால், தொகுதி பங்கீட்டில், கூட்டணி தலைமை முன், பணியாள் தீபாவளி இனாம் கேட்பது போல நிற்காமல், சொத்தில் பங்கு கேட்கும் பங்காளி போல உரக்க கேட்கலாம்.மக்களுடன், காங்கிரசார் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்கின்றனர். உட்கட்சி அமைப்பை வலுப்படுத்தினால், தி.மு.க., தலைமை, காங்கிரசை தேடி வரும். அதுவரை, பணியாள் போல, அறிவாலயத்தின் முன் நிற்க வேண்டியது தான்!


ஆண்டுதோறும் இதே பஞ்சாயத்து!வி.சம்பத், சென்னையிலிருந்து எழுதுகிறார்: விவசாயி போராடி விளைவித்த நெல்லை, உடனே கொள்முதல் செய்ய, தமிழக அரசு தவறியது. பருவ மழையால், நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்கிறது. கொள்முதல் நிலையங்களில், 16 சதவீதம் வரை தான், ஈரப்பதம் அனுமதிக்கப்படுகிறது; இதனால் விவசாயிகள், தவித்து வருகின்றனர்.நெல்லில் ஈரப்பதம் அதிகரிக்க, விவசாயிகள் காரணமல்ல; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத, தமிழக அரசின் நிர்வாகக் குறைபாடு தான், அதற்கு காரணம்.இந்நிலையில் தமிழக அரசு, 22 சதவீத ஈர நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது.விளைந்த நெல்லை, மழையில் நனையாமல் பாதுகாக்க வழி வகை செய்யாமல், ஈர நெல்லை வாங்க, அனுமதி கேட்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும், இதே நிலை தான்.கடந்த, தி.மு.க., ஆட்சியை விட, இப்போது ரேஷனில் நல்ல அரிசியை தான் வினியோகம் செய்கின்றனர்; ஆனால், இப்போது அதற்கும் கேடு வந்து விடும் போலிருக்கிறது.ஈர நெல்லை உடனடியாக அரவை மில்லுக்கு அனுப்பினாலும், பெரிய பலன் இல்லை. ஈர அரிசி விரைந்து தரம் இழக்கும். பழுப்பு நிறமடைந்து, உண்ணவே இயலாததாகி விடும். புழு, வண்டு, பூச்சி ஆகியவை, அரிசியை விரைவில் அரிக்கத் துவங்கும்.மத்திய அரசு, 22 சதவீத ஈர நெல்லை கொள்முதல் செய்ய அனுமதித்தாலும், அதை உடனடியாக உலர வைக்க வழி செய்யாவிட்டால், அனைத்தும் வீணாகிவிடும்.தமிழக அரசு, அடுத்த ஆண்டாவது, நெல் கொள்முதலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மின்சாரத்தில் அலட்சியம் காட்டாதீர்!ஆரூர் சரவணா, திருவாரூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊரெங்கும் தீபாவளி கொண்டாட்டம் துவங்கிய நேரத்தில், மதுரையில், பழைய கட்டடத்தில் இயங்கி வந்த துணிக்கடையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, கட்டடம் இடிந்து விழுந்ததில், தீயணைப்பு வீரர்கள், இருவர் பலியாயினர். இது மிகவும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.எளிதில் தீப்பற்றும் பொருட்கள் அதிகம் இருக்கும் கடைகளில், இது போன்ற தீ விபத்து அவ்வப்போது நிகழ்கின்றன. பெரும்பாலும், இத்தகைய தீ விபத்துக்கு மின் கசிவே முக்கியக் காரணம் என, போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது.தற்போது, தகர, 'ஷீட்'டுகளில் மேற்கூரை அமைக்கப்பட்ட கடைகளில் கூட, 'பால்ஸ் சீலிங்' என்ற, உள் அலங்கார கூரை அமைத்து, குளிர்சாதன வசதியை செய்து விடுகின்றனர்.அவற்றிற்குமின் இணைப்புகொடுக்க, குழாயின் அளவை விட, அதிகமான எண்ணிக்கையில் ஒயர்களை இழுப்பது, தரமற்ற ஒயர்களை பயன்படுத்துவது என, செலவைக் குறைக்கும் செயலில், கடை உரிமையாளர்கள் ஈடுபடுகின்றனர்.மின் விளக்கின் வெப்பம் வெளியேற போதிய வழியில்லாமல் இருப்பதும், தரமற்ற மின்சாதனப் பொருட்களுமே, தீ விபத்திற்கு காரணமாகின்றன.'செலவை குறைக்கிறோம்' என்ற பெயரில் உயிரிழப்பு, பொருள் இழப்பு போன்ற அசம்பாவிதங்களுக்கு, கடை உரிமையாளர்கள் காரணமாகின்றனர்.ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மின் சாதனங்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, கடை மற்றும் வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்ய வேண்டும். ஒயர்களுடன் கூடிய, பி.வி.சி., பைப் பதிக்கப்பட்டிருக்கும் இடத்தில், ஆணி அடிக்கக் கூடாது.இப்படி, மின்சார பயன்பாட்டில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதில், அலட்சியம் காட்டுவது, ஆபத்தை விளைவிக்கும்.


மறதி மன்னர்கள் இல்லை மக்கள்!அ.பன்னீர் செல்வம், சூணாம்பேடு, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., தலைவர், ஸ்டாலின் சமீபத்தில் நடந்த, அக்கட்சியின் கூட்டத்தில் பேசியவற்றைப் பாருங்கள்...'தமிழகத்தில் நடப்பது, கட்சியின் ஆட்சி அல்ல; கும்பலின் ஆட்சி. தமிழகத்தில் தொழில் துவங்க, பெரிய நிறுவனங்கள் ஏதும் வரவில்லை. பா.ஜ.,வின் பாதத்தில் பூனைக்குட்டி போல், அ.தி.மு.க., படுத்துக் கிடக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தமிழகம் மீட்கப்படும்' என, அவர் கூறியுள்ளார்.இப்போது ஸ்டாலின் பேசுவது எல்லாம், கடந்த கால, தி.மு.க., ஆட்சியின் அவலத்தைத் தான் நினைவூட்டுகின்றன.தி.மு.க., ஆட்சியின்போது, அனைத்து துறைகளிலும் அராஜகம் தலைவிரித்தாடியது. தனக்கு எதிராக உண்மைகளை வெளியிடும் பத்திரிகை மீது தாக்குதல், சினிமா துறையினருக்கு மிரட்டல் என, எண்ணற்ற களேபரங்கள் நடந்தன.
ஆளுங்கட்சியினரின் கையாளாக, போலீசார் நடந்து கொண்டனர். அன்றைக்கு காவல் துறையினர் மீது, மக்களுக்கு நன்மதிப்பு இல்லை.எதிர்க்கட்சியினராக இருக்கும் நிலையில் கூட, பிரியாணி கடை, பியூட்டி பார்லர், பஜ்ஜி கடை மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினரே... அதிகாரத்தில் இல்லாதபோதே, இவ்வளவு ஆட்டம் போடும், .மு.க.,வினரிடம், ஆட்சி அதிகாரம் கிடைத்தால், தமிழகம்தாங்குமா?தி.மு.க., மாவட்டச் செயலர்கள், குறுநில மன்னர் போல அத்துமீறி நடந்து கொண்டனரே... அது தான், கும்பலின் ஆட்சி. தமிழகத்தில் பெரிய நிறுவனங்களுக்கு, துவங்கவும், விரிவாக்கவும் தடை போடுவது, எதிர்க்கட்சியாக இருக்கும், தி.மு.க., தானே!இலங்கையில் நடந்த இன படுகொலையின் போதும், '2 ஜி' விவகாரத்தில் சிக்கியபோதும், அப்போதைய, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் காலடியில், பூனை போல், தி.மு.க., படுத்துக் கிடந்ததை, ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த வேண்டும்.தமிழக மக்கள், இவை எல்லாவற்றையும் மறந்து, குடும்ப ஆட்சிக்கு முடிசூட்டி விடுவர் என, ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்.என்றைக்கு, தன் கட்சியினரை நம்பாமல், பல கோடி ரூபாய் கொடுத்து, அரசியல் ஆலோசனைக்காக, பிரசாந்த் கிஷோரின் குழுவை நியமித்தாரோ, அன்றைக்கே, தி.மு.க.,வின் அஸ்திவாரம்
ஆட்டம் கண்டுவிட்டது.தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், என்ன நடக்கும் என்பது, மக்களுக்கு தெரியும்; அவர்கள், மறதி மன்னர்கள் அல்ல என்பதை, காலம் நிரூபிக்கும்!


நடுநிலை தன்மை இல்லை!ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதி மற்றும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபடும் போது, அவர்களுக்கு கடிவாளம் போட, புலனாய்வு அமைப்புகள் இருப்பது அவசியமே; இதில், மாற்றுக்கருத்து இருக்க முடியாது.ஆனால், அந்த அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மை குறைந்தே வருகிறது. ஆளுங்கட்சியினர் மீது, அந்த அமைப்புகள் நடவடிக்கை எடுப்பதில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான சில நடவடிக்கை, அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.ஆட்சி மாறும்போது, பொறுப்பேற்கும் கட்சியின் கைப்பாவைகளாய், மேற்படி அமைப்புகள் மாறி விடுகின்றன
என்பதே உண்மை.சி.பி.ஐ., - ஐ.பி., போன்றவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. போலீஸ், லஞ்ச ஒழிப்புத்துறை, சி.பி.சி.ஐ.டி., முதலிய அமைப்புகள், மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. அவை, எப்படி நேர்மையாக செயல்பட முடியும்?மத்திய அரசுடன், மாநில அரசின் உறவை பொறுத்தே, சி.பி.ஐ., - ஐ.பி., போன்ற அமைப்புகளும் செயல்படுகின்றன.சரி, அந்த அமைப்புகள், அரசியல்வாதிகளின் வீட்டில், 'ரெய்டு' நடத்தியபின், என்ன நடந்திருக்கிறது? பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்; அடுத்த சில நாட்களில், அந்த வழக்கு புஸ்வானம் ஆகிவிடும்.இன்றைய நிலையில், எந்த அமைப்பும்
நடுநிலை தன்மையுடன் இல்லை என்பதே நிதர்சனம்!


இதை நம்ப மாட்டார்கள்!என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சுதந்திரத்திற்கு முன், நம் நாட்டில் எத்தனையோ யாத்திரைகள் நடந்தன.உப்புக்கு, ஆங்கிலேயர் வரி விதித்ததை எதிர்த்து, மஹாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்தினார். தமிழகத்தில், ராஜாஜி, வேதாரண்யம் வரை உப்பு வரியை எதிர்த்து, யாத்திரை நடத்தினார்; இதனால், சுதந்திர போராட்டம் மேலும் வலுவடைந்தது.ஹிந்து மதத்தின் பெருமைகளை உணர்த்த ஆதிசங்கரர், நம் நாடு முழுவதும் சுற்றி பாத யாத்திரை மேற்கொண்டார். அன்றைய அரசியல் தலைவர்களும், ஆதிசங்கரரும் விளம்பரத்திற்காக யாத்திரை நடத்தவில்லை.
தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, அறநிலையத்துறை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை மரணம் தொடர்பாக நீதி கேட்டு, மதுரையிலிருந்து திருச்செந்துாருக்கு பாத யாத்திரை நடத்தினார்; பாட்டுப் பாடி, குத்தாட்டம் ஆடியபடியே, தி.மு.க., ஊர்வலம் சென்றனர்.விடுதலைப்புலித் தலைவரைச் சந்திக்க, யாழ்ப்பாணம் செல்லப் போவதாக, பழ.நெடுமாறன், ராமேஸ்வரம் வரை பாதயாத்திரை போய், அங்கிருந்து படகில் செல்லப் போவதாகச் சொன்னார்.இவரது, 'காமெடி' நாடகத்தில், குமரி அனந்தனும் பங்கேற்று, அசிங்கப்பட்டு போனார்.எல்லை தாண்டினால், இலங்கை கடற்படையால் சுடப்படுவர் என, அந்நாட்டின் ஜனாதிபதி, ஜெயவர்த்தனே கடுமையாக எச்சரிக்கை செய்தார். இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆர்., பாத யாத்திரை
செய்தோரை கைது செய்து, காப்பாற்றினார்.இப்போது, தமிழக, பா.ஜ., தலைவர் முருகன், கையில் வேல் தாங்கி, திருத்தணியிலிருந்து, திருச்செந்துார் வரை, வேல் யாத்திரை நடத்துவதாக அறிவித்தார்.ஆன்மிக யாத்திரை செல்வோர், நடந்து தான் போக வேண்டும். ஆனால் இவர்கள், உடல் நோகாமல், வேனில் பயணம் செய்வது, எப்படி முறையாகும்?தமிழகத்தில், பா.ஜ.,வை வளர்க்க, இந்த வேல் யாத்திரையை நடத்துகின்றனர். அரசியல் லாபத்திற்காக யாத்திரை செல்வோரை, தமிழக மக்கள் நம்புவதில்லை.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
22-நவ-202014:48:24 IST Report Abuse
Darmavan நெல் கொள்முதலை ஏன் எந்த விவசாயியும் கோர்ட் மூலம் தீர்வு தேடவில்லை.இதை மழைக்காலம் முன் முடிக்க வேண்டும் என்று கோர்ட் ஆணை இடவேண்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-நவ-202006:32:00 IST Report Abuse
D.Ambujavalli கலைஞர் மட்டும் இப்போது இருந்தால் இந்த பி கே எல்லாம் எட்டிப்பார்க்கக்கூட விட மாட்டார் கட்சிக்குள்ளேயே கலகம், பாடுபடும் தொண்டர்களுக்கு ஊக்கம் இல்லை, தப்பித் தவறி விழும் வோட்டுகளைக்கூட தடுத்துவிடும் கைங்கர்யம் தான் செய்கிறார் இவர் . போதாக்குறைக்கு அரைகுறை ஆட்டம் போடும் மகனும், அவரது கூட்டமும். எதிர்க்கட்சிக்கு இவர்களே தூக்கிக்கொடுத்து விடுவார்கள்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202004:29:53 IST Report Abuse
J.V. Iyer போன பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் பண தயவினால் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இவர்களுக்கு எது செல்வாக்கு? இவர்கள் தங்களுக்குள் சண்டையிடவே நேரம் பத்தவில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X