மனுஸ்மிருதி மீது ஏன் கோபம்?| Dinamalar

மனுஸ்மிருதி மீது ஏன் கோபம்?

Updated : நவ 28, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (48)
Share
ஹிந்துக்களை எதிர்ப்பவர்களுக்கு, முதலில் நினைவுக்கு வருவது மனுஸ்மிருதி. அந்த மனுதர்ம சாஸ்த்திரத்தை ஏளனம் செய்வதே, முற்போக்கு கண்ணோட்டம் என, சிலர் நினைக்கின்றனர். நாகரிகமானவர்கள் என்று எண்ணிக் கொள்ளும் சிலருக்கு, மனு பெரிய எதிரியாகி விட்டார்.மனுதர்ம சாஸ்த்திரம் என்ற பெயரைச் சொன்னாலே, ஹிந்துக்களில் கூட பலரும் சங்கடமாக உணர்கின்றனர். போலி
உரத்தசிந்தனை, மனுஸ்மிருதி, கோபம்?

ஹிந்துக்களை எதிர்ப்பவர்களுக்கு, முதலில் நினைவுக்கு வருவது மனுஸ்மிருதி. அந்த மனுதர்ம சாஸ்த்திரத்தை ஏளனம் செய்வதே, முற்போக்கு கண்ணோட்டம் என, சிலர் நினைக்கின்றனர். நாகரிகமானவர்கள் என்று எண்ணிக் கொள்ளும் சிலருக்கு, மனு பெரிய எதிரியாகி விட்டார்.மனுதர்ம சாஸ்த்திரம் என்ற பெயரைச் சொன்னாலே, ஹிந்துக்களில் கூட பலரும் சங்கடமாக உணர்கின்றனர்.


போலி மேதாவிகள்


அனைத்துப் புறங்களில் இருந்தும், அதன்மீது விழும் மறுப்புகளுக்கும், புகார்களுக்கும் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் குழம்புகின்றனர்.

மனுஸ்மிருதி குறித்து, தெலுங்கு மொழியின் மூத்தப் பத்திரிகையாளரும், 'ஆந்திரபூமி' நாளிதழின் ஆசிரியருமான, எம்.வி.ஆர். சாஸ்திரி, 'நமக்குப் பிடிக்காத மனு' என்ற நுாலை, பல ஆதாரப்பூர்வமான சான்றுகளோடு எழுதியுள்ளார். அதில், 'இந்நாட்களில் மனுஸ்மிருதியை மறுப்பவர்களுக்கு உண்மையில் அதில் என்ன உள்ளது என்றே தெரியாது. எப்போதோ எங்கேயோ யாரோ போலி மேதாவிகள் எழுதியதையோ கூறியதையோ, உண்மை என்று நம்புபவர்களே அதிகம்' என்று குறிப்பிடுகிறார்.

பிரபஞ்சத்திலேயே தர்ம நியாய சம்ஹிதையை எழுதிய முதல் அறிஞர் மனு. மனுவின் வர்ண அமைப்பு பகுத்தறிவோடு கூடியது. தற்போதுள்ள ஜாதி அமைப்பு வேறு. மனு கூறிய நான்கு வர்ண அமைப்பு வேறு. அவ்விரண்டிற்கும் இடையே, இமயமலைக்கும், கற்குவியலுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது. அதே பெயரில் காலக்கிரமத்தில் ஜாதிகளையும், அதன் உப குலங்களையும் நாம் ஏற்படுத்திக் கொண்டோம். அதற்கு மனு பொறுப்பல்ல

.'ஜாதியின் பின் உள்ள கொள்கை வேறு. வர்ணத்தின் பின் உள்ள கொள்கை வேறு. அவ்விரண்டும் அடிப்படியில் வேறு வேறானவை. அது மட்டு மல்ல. அவை அடிப்படையில் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிரானவை. மக்கள் தம் வர்ணங்களை மாற்றிக் கொள்ள முடியும்' என, சட்டமேதை அம்பேத்கார் தன் நுால் ஒன்றில் தெரிவிக்கிறார்.

மனு ஸ்மிருதி மீதான வெறுப்பு, மனுவுக்கோ அவருடைய தர்ம சூத்திரங்களுக்கோ மட்டுமே தொடர்புடைய விவகாரமானால், நவீன சமுதாயம் பெரிதாக கண்டுகொள்ள வேண்டிய தேவையில்லை. ஆனால், மனுவை நோக்கிக் குறி வைத்து, ஹிந்து மதத்தையும், கலாசாரத்தையும், நம் பாரம்பரியத்தையும் மண்ணோடு புதைக்க வேண்டும் என்ற சதித்திட்டம் நடக்கிறது.

மனுஸ்மிருதி மிக மிகப் பழமையான, 4,000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தர்ம சாஸ்த்திர நுால். மானுட வாழ்வின் நியமங்களையும், தர்ம நெறி முறைகளையும் விவரிக்கும் நுால்.


வேதம்


தனி மனிதனுக்கும் அவன் மூலம் சமுதாயத்திற்கும் அளித்த நடத்தை விதிமுறைகளைக் கொண்ட இந்த நுால் வேதங்களை ஆதாரமாகக் கொண்டது. ஆனால், காலக்கிரமத்தில் மனுதர்ம சாஸ்த்திரத்தில் இடைச்செருகல்கள், இணைப்புகள், கற்பனைகள் நுழைந்துவிட்டன. மறக்கப்பட்டிருந்த மனுஸ்மிருதியை நவீன உலகிற்கு உயர்வாக அறிமுகம் செய்தவர்களில், ஜார்ஜ் பூலர் என்பவரும் ஒருவர்.

அவர் கடந்த, 1886ல், 'லாஸ் ஆப் மனு' என்ற பெயரில், பூலர் வெளியிட்ட ஆராய்ச்சி நுாலில் அவர் கூறுவதைப் பாருங்கள்: மனுஸ்மிருதியில் சிறிதும் பெரிதுமான இடைச்செருகல்கள், மிக அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஒரு இடத்தில் கூறியுள்ளவற்றுக்கு முழு மாறுபாடாக, இன்னொரு இடத்தில் வேறு விதமாக குறிப்பிட்டுள்ளதைக் காண முடிகிறது. இது, காலக்கிரமத்தில் சேர்ப்புகளும் இணைப்புகளும் நடந்ததால் நேர்ந்த விளைவு.
இவ்வாறு அவர் கூறுகிறார்.


அனைத்தையும் விட முக்கியமானது வேதம். அதில், இடைச்செருகல்கள் இல்லை; வெவ்வேறு பாடங்கள் இல்லை. எங்கும் ஓர் அட்சரம் தவறிவிடாமல் யாரும் மாற்றுவதற்கு வாய்ப்பில்லாமல் மறுக்க இயலாத கட்டமைப்போடு பழங்காலத்திலிருந்தே காப்பாற்றப்பட்டு வருவதால் வேதம் விஷயத்தில் சந்தேகமோ தெளிவின்மையோ கிடையாது. வேதமே மூலம் என்று மனுவே கூறியுள்ளதால், வேதத்தில் கூறியுள்ளவற்றுக்கு விரோதமாக மனுஸ்மிருதியில் ஏதாவது கூறியிருந்தால், அது மனுவின் அபிப்பிராயம் அல்ல என்று தீர்மானித்து விடலாம்.

ஸ்மிருதிகள் எத்தனை இருந்தாலும், அவற்றின் போதனைகளின் சாரமான தர்மத்திற்கு விரோதமான அம்சங்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடலாம். அதில், சந்தேகம் ஏதாவது இருந்தால், மூன்றாவது பிரமாணமான சதாசாரத்தை அனுசரித்து, நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டு தவறா, சரியா என்று முடிவெடுக்கலாம். அப்படியும் ஒருவேளை, ஏதாவது விஷயம் நம் மனசாட்சிக்கு விரோதமாக இருந்தால் மனதைக் கொன்று, அதை கடைப்பிடிக்க வேண்டிய தேவையில்லை என்று மனுவே விதிவிலக்கு அளித்துள்ளார். உலகில் வேறு எந்த ஒரு மதமும் மானுடனுக்கு அனுமதி அளிக்காத, வளைந்து கொடுக்கும் தன்மை இது.


நவீன தராசு


அறிவியல் கூறும் ஆசிட் டெஸ்ட்களுக்கு சற்றும் குறையாத இந்த நான்கு தர நிர்ணயங்களின் உதவியோடு, மனுஸ்மிருதியில் தவறுகளை நீக்குவது இயலாத காரியம் இல்லை. உலகில் எந்த தர்ம சாஸ்த்திரமானாலும், அது வெளிவந்த காலத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டுமே தவிர, இன்றைய சிந்தனைப் போக்கோடு அன்றைய கருத்துக்களின் மீது தீர்ப்பு கூறக் கூடாது.

அவ்வாறு நவீன தராசு கொண்டு விலை கூறப்போனால், வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்த எந்த ஒரு புனித நுாலும் நிற்க முடியாது. 'மனு, பெண்களுக்கு எதிரி' என்று கூச்சலிடும் கூட்டத்தினருக்கு சமஸ்கிருதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் துளியும் கிடையாது. 'எங்கு பெண்கள் மதிக்கப்படுகின்றனரோ, அங்கு தேவதைகள் கருணையோடு விளங்குவர். பெண்களுக்கு மதிப்பில்லாத இடத்தில் நடக்கும் தெய்வ பூஜை போன்ற செயல்கள் அனைத்தும் வீண்' என, மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ளது.

அதுபோல, 'சிறு வயதில் பெண்ணைத் தந்தை பாதுகாக்க வேண்டும்; மணமான பின் யௌவன வயதில் கணவன் பாதுகாக்க வேண்டும்; முதிய வயதில் மகன் பாதுகாக்க வேண்டும்; எப்போதுமே பெண்ணை பாதுகாப்பு அற்றவளாக விடக்கூடாது' என்றும், மனு தான் கூறுகிறார். மேலும், 'பெண்கள் துயருற்றால் அவர்களின் துன்பத்துக்குக் காரணமானவரின் வம்சம் முழுவதும் நசிந்து போகும். பெண்கள் மகிழ்ச்சியோடு இருந்தால் அந்த வீடும், அவர்களின் வம்சமும் எப்போதும் ஆனந்தமாக மேன்மையுறும்' என்று சொல்லி இருப்பதும் மனு தான்.

உலகில், பெண்களின் சிறப்பை அடையாளம் கண்டு, அவர்களின் கண்ணியத்தை உயர்த்தி, சமுதாயத்தில் தகுந்த, கவுரவமான ஸ்தானத்தை அளித்த முதல் தர்மவாதி மனு. சொத்துரிமை விஷயத்தில், 'புத்ரேன துஹிதா சம' என்று, மகன், மகள் இருவரும் சமமானவர்கள் என்று மிகப் பழங்காலத்திலேயே அடித்துக் கூறிய பெருந்தகை மனு.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், மனு என்ன சொன்னார் என்று பாருங்கள்:'பெற்றோர், மகளுக்கு சரியான வயதில் திருமணம் செய்யாவிட்டால், மகள் தகுந்தவனை மணம் புரிந்து கொள்ளலாம். பெற்றோரை எதிர்த்த பாவம் பெண்ணுக்கு ஏற்படாது' என்கிறார்.

இப்போது, வாய்கிழியப் பேசும் பகுத்தறிவாளர்களை, பெண்ணியவாதிகளை, மனிதாபிமானவாதிகளை சில கேள்விகள் கேட்போம்:மனு ஸ்மிருதியில் பெண் சுதந்திரத்தை மனு பறித்துவிட்டார் என்று நீங்கள் எல்லாம் மிகவும் ஆவேசமாக முழங்கினீர்கள் அல்லவா... கணவன் காலின் கீழ், பெண் வாயை மூடிக் கொண்டு கிடக்கவேண்டுமென்று, ஒரு மதத்தின் புனித நுால் கூறுவது, பெண்ணுக்கு மிக உயர்ந்த சுதந்திரம் அளித்தாற்போல ஆகிறதா?புனித நுால்


பெண்ணை ஆதிசக்தியாகப் போற்றும் ஹிந்து மதம், பெண்களை கவுரவித்து வழிபட்டால் தான் தேவதைகள் மகிழ்வர் என்று கூறிய மனுதர்மம், உங்கள் கண்ணுக்கு பகையாகத் தெரிகிறதா? மனு ஸ்மிருதியில் உள்ளதென்று நீங்கள் நினைப்பதை விட, நுாறு மடங்கு அதிகம் இழிவாக உள்ள பிற மத புனித நுால் குறித்து நீங்கள் ஏன் வாய் திறப்பதில்லை? யாரும் சீண்டாத, காலத்தில் மிகப்பழமையான மனுஸ்மிருதியில், ஆண் - பெண் உறவு குறித்து விதித்த கட்டுப்பாட்டிற்கே, ஊர் இரண்டுபடும்படி கூச்சலிடுபவர்கள், தற்போதும் உலகெங்கும் கோடிக்கணக்கானவர்கள் பக்தியோடு பாராயணம் செய்யும், ஒரு மதத்தின் புனித நுாலில் இருப்பது பற்றி வாய் திறக்க மாட்டீர்கள்.

ஏனென்றால், மனுஸ்மிருதியை பயங்கர பிசாசு போல் சித்தரிக்கும் சதித் திட்டங்களையும், புரளிகளையும் கேட்டு, வேண்டாத பிரமைகளை வளர்த்துக் கொண்டுள்ள சாமானிய மக்களுக்கு, இந்த விவாதத்தின் மறுபக்கத்தைக் காட்டும் முயற்சி இது.இது எதுவரை பலனளிக்கும் என்பதை அறிஞர்களே கூற வேண்டும்!

ராஜி ரகுநாதன்
எழுத்தாளர்,
ஹைதராபாத்

தொடர்புக்கு: இ - மெயில்: raji.ragunathan@gmail.com

9849063617

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X