கட்சியை வலுப்படுத்தவும், தே.ஜ., கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கவும், நாடு முழுதும், 100 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா முடிவு செய்துள்ளார்.
மத்தியில், 2014ம் ஆண்டிலிருந்து, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், தெலுங்கு தேசம், சிவசேனா, அகாலி தளம் உட்பட பல கட்சிகள், தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகியுள்ளன.இந்த ஆண்டு துவக்கத்தில், பாஜ., புதிய தலைவராக, ஜே.பி.நட்டா பொறுப்பேற்றார்.
இவரது தலைமையில், பா.ஜ., சந்தித்த முதல் தேர்தலாக, டில்லி சட்டசபை தேர்தல் அமைந்தது. ஆனால், தேர்தலில், பா.ஜ., படுதோல்வியை சந்தித்தது.இந்நிலையில்தான், சமீபத்தில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத்தேர்தல்களில், பா.ஜ., அபார வெற்றி பெற்றது.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது தான், நட்டாவுக்கான அக்னி பரீட்சையாக கருதப்படுகிறது.மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், பா.ஜ., தலைவர்கள் உறுதியாக உள்ளனர். தமிழகம் மற்றும் கேரளாவில் இம்முறையாவது, கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது.இந்நிலையில் தான், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், தே.ஜ., கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் முயற்சியாகவும், நாடு முழுதும் யாத்திரை மேற்கொள்ள, ஜே.பி.நட்டா முடிவு செய்துள்ளார்.
'ராஷ்ட்ரீய விஸ்திரித் பிரவாஸ்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை, 100 நாட்கள் நடக்க உள்ளது. யாத்திரையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு செல்ல, நட்டா முடிவு செய்துள்ளார். விரைவில், யாத்திரைக்கான தேதி உள்ளிட்ட விபரங்கள் வெளியாகும் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE