சென்னை : ''தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடரும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.
சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:
தமிழகம், நீர் மேலாண்மையில், சோழர்கள் காலத்தில் இருந்தே சிறந்து விளங்குகிறது. சோழர்கள் காலத்தில், பல்வேறு நீர் நிலைகள் உருவாக்கப்பட்டன. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை கொடுத்தார். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, மக்கள் இயக்கமாக மாற்றினார்.
தற்போது, குடிமராமத்து திட்டத்தின் கீழ், 6,278 நீர் நிலைகள், 1,433 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளன. மேலும், ஊரக வளர்ச்சி துறையின் கீழ், 5,186 சிறு பாசன ஏரிகள், 25 ஆயிரத்து, 987 குளங்கள், 805 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டுள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகளில், 160 தடுப்பணைகள், பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சி துறை சார்பில், 42 ஆயிரத்து, 635 சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம்; அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; மேட்டூர் - சரபங்கா வடிநில நீரேற்று திட்டம்; கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, ஆதனுார் - குமாரமங்கலத்தில் கதவணை என, பல்வேறு நீர்வள ஆதார திட்டங்களை, அரசு நிறைவேற்றி வருகிறது.
மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடி, சோதனையான தருணத்தில், நாட்டு மக்கள் ஒத்துழைப்போடு, வல்லரசு நாடுகள் பாராட்டுகிற அளவுக்கு ஆட்சி செய்கிறார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க, அல்லும் பகலும் அயராமல் உழைத்து வருகிறார். அவரது கடுமையான முயற்சிக்கு, தமிழகம் எப்போதும் துணை நிற்கும்.
லோக்சபா தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும். அ.தி.மு.க., 10 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளது. பல்வேறு திட்டங்களை, நாட்டு மக்களுக்கு தந்துள்ளது. மீண்டும், வரும் சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெறும். அ.தி.மு.க., ஆட்சி அமையும்.இவ்வாறு, அவர் பேசினார்.
துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது:
கடந்த, 2011ல் இருந்து, அ.தி.மு.க., அரசு அனைத்து துறைகளிலும், ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து, தமிழக மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஜெ., அரசு, கோடிக்கணக்கான தமிழக மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்து, மக்களுடன் பயணித்து, மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதில், நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. அதனால் தான், தமிழக மக்கள் என்றும், எங்கள் பக்கம்.
அரசின் சாதனைகளை, தமிழக மக்கள் பார்க்கின்றனர்; பாராட்டுகின்றனர். எதிர்கட்சியினரும் பார்க்கின்றனர்; ஆனால், பரிதவிக்கின்றனர். ஜெ., அரசுக்கு தினமும் மக்கள் செல்வாக்கு கூடுகிறதே என, மனம் பதைக்கின்றனர். அதனால், மனம் பொறுக்க முடியாமல், குற்றம் சொல்கின்றனர்.
ஜெ., வளர்த்த சிங்கங்கள் தான், அ.தி.மு.க., தொண்டர்கள். சிங்கத்தின் குகையிலே வந்து, சிறுநரிகள் வாலாட்ட முடியாது. எனவே, தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்று, முத்திரை பதிப்போம். வெற்றிக்கனி பறிப்போம்.இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கிய, பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் கடினமாக இந்தியாவை நல்வழிப்படுத்த, ஆற்றலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இனி வரும் தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., வெற்றி கூட்டணி தொடரும். இவ்வாறு, அவர் பேசினார்.
அரசு விழாவில் அரசியல்
தமிழக அரசு சார்பில் நடந்த அரசு விழாவில், முதல்வரும், துணை முதல்வரும், கூட்டணி தொடரும் என அறிவித்ததும், தி.மு.க., - காங்., கட்சிகள் ஆட்சியிலிருந்த போது, தமிழகத்திற்கு என்ன செய்தன என, அமித்ஷா கேள்வி எழுப்பியதும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு விழாவில், அரசியல் பேசலாமா என, எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE